
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.20,860 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்குமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மூன்று நாள் பயணமாக டெல்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு பிரதமர் மோடி, மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை உள்ளிட்ட பலரையும் சந்தித்து பேசினார். அதை தொடர்ந்து இன்று டெல்லியில் உள்ள நிதியமைச்சக அலுவலகத்தில் நிதிமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.20,860.40 கோடி நிலுவைத் தொகையை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து நிர்மலா சீதாராமனிடம், சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் இழப்பீட்டுக்கு நிலுவை தொகை வகையில் தமிழ்நாட்டிற்கு ரூ.13,504.74 கோடி தர வேண்டியுள்ளது. தமிழ்நாட்டில் ஊராட்சிகளுக்கு அடிப்படை மானியமாக ரூ.7,899.69 கோடி வழங்க 14 ஆவது நிதிக்குழு பரிந்துரைத்தது. நிதிக்குழு பரிந்துரைத்ததில் 2 ஆயிரத்து 900 கிராம ஊராட்சிகளுக்கான ரூ.548.76 கோடி மானியம் வழங்கப்படவில்லை. 2 ஆயிரத்து 700 ஊராட்சிகளிலும் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டதால் மானிய தொகையை உடனே விடுவிக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.20,860.40 கோடியை விடுவிக்க வேண்டும்.
ரூ.20,860.40 கோடியில் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மட்டும் ரூ.13,504.74 கோடி இருக்கிறது. ஜிஎஸ்டி உள்பட 16 திட்டங்களுக்கான தமிழகத்திற்குரிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை வழங்கும் காலம் ஜூனுடன் முடிந்தாலும் மேலும் 2 ஆண்டுகளுக்கு வழங்க வேண்டும். ஜூனுக்கு பின் இழப்பீடு தொகை தராவிடில் 2022-2023 இல் தமிழகம் ரூ.20,000 கோடி வருவாய் இழப்பை சந்திக்கும். 2018-2019, 2019-2020 ஆம் ஆண்டுகளுக்கான உள்ளாட்சி மன்ற செயல்பாட்டு மானியத் தொகை ரூ.2029.22 கோடியையும் விடுவிக்க வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முன்வைத்தார்.