
விவசாய மின் இணைப்பு விண்ணப்பம் பதிவு செய்வதிலும், மின் இணைப்பு பெறுவது என்றும், அதனை உபயோகப்படுத்துவதிலும் மற்றும் இடமாற்றம் செய்வதிலும், இதுவரை நிலவிவந்த நடைமுறை சிக்கல்கள் அகற்றப்பட்டு இனி தாமதமின்றி விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தமிழ்நாடு மின்சார வழங்கல் மற்றும் பகிர்மான விதிகளில் திருத்தங்கள் வெளியிட்டு கீழ்க்கண்ட எளிமையான முறைகளை நடைமுறைப்படுத்த ஆணை வழங்கியுள்ளது.
மின் இணைப்புக் கோரும் விவசாய கிணறு கூட்டு உரிமையாக இருக்கும் பட்சத்தில், கூட்டு சொந்தக்காரர் ஒப்புதல் தர மறுத்தால், விண்ணப்பதாரர் பிணை முறிவு பத்திரம் அளித்தால் போதுமானது. விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு பதிவு செய்யப்படும். விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலர் அளிக்கும் கிணறு மற்றும் நிலத்திற்கான உரிமைச் சான்று ஒன்று மட்டும் போதுமானது, இதர ஆவணங்கள் தேவையில்லை, குறைந்தபட்சம் அரை ஏக்கர் பாசன நிலம் இருக்க வேண்டும். மின்மோட்டார் மற்றும் மின்தேக்கி முதலியவைகளை வாங்கி பொருத்தி தயார் நிலையில் ஆரம்பத்திலேயே தெரிவிக்க தேவையில்லை, மின் இணைப்பு வழங்குவதற்கான மின்மாற்றி மற்றும் மின் கம்பி, சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளும் முடிவுற்ற பின் விண்ணப்பதாரருக்கு 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும்அப்போது தயார் நிலையில் தெரிவித்தால் போதும்.
தயார் நிலையை தெரியப்படுத்திய மூன்று நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்படும். ஒரே சர்வே எண்ணில் அல்லது உட்பிரிவு சர்வே எண்ணில் ஒருவருக்கு இரண்டு கிணறுகள் இருக்கும்பட்சத்தில், தலா அரை ஏக்கர் பாசன நிலம் இருப்பின் ஒவ்வொரு கிணற்றுக்கும் தனித் தனி மின் இணைப்பு அனுமதிக்கப்படும். ஒரே கிணற்றில் கிணற்றின் உரிமையாளர்கள் அனைவரும் ஒவ்வொரு மின்னிணைப்பு இருக்கும் அரை ஏக்கர் பாசன நிலம் இருக்கும் பட்சத்தில், அதை கிணற்றில் தனித்தனியாக மின்னிணைப்பு பெற்றுக்கொள்ளலாம். ஒரே கிணற்றில் விவசாயம் அல்லாத பிற தேவைகளுக்காக தண்ணீர் வைத்துக் கொள்ள, அதற்குரிய இந்தப் பட்டியலில் மற்றொரு மின் இணைப்பு வழங்க அனுமதிக்கப்படும்.
மாநிலத்திற்குள் விவசாய மின் இணைப்பு இடமாற்றம் செய்தல்
தமிழ்நாட்டிற்குள் எந்தப் பகுதியில் இருந்தும் எந்த பகுதிக்கும் விவசாய மின் இணைப்பு இடமாற்றம் செய்ய அனுமதிக்கப்படும், இடம் மாற்றத்திற்கான காரணம் தெரிவிக்க வேண்டியதில்லை, நிலம் விற்கப்பட்டு கிணறு மட்டும் இருந்தால் கூட அதில் உள்ள மின் இணைப்பை இடமாற்றம் செய்ய அனுமதிக்கப்படும். மாற்றத்திற்கான செலவை மனுதாரர் பங்களிப்பு பணிகளுக்கான ஒப்பீட்டு முறையின் கீழ் ஏற்க வேண்டும்.
முறை மாற்ற திறப்பான் உபயோகிப்பதற்கான அனுமதி
விவசாய மின் இணைப்பில் முறை மாற்ற திறப்பான் அமைத்து உபயோகப் படுத்துவதற்கான விண்ணப்பத்துடன் மின்மோட்டார், மின்தேக்கி தொடர்பான விவரங்கள் தவிர எந்தவித ஆவணங்களும் இணைக்கத் தேவையில்லை. விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் சம்மந்தப்பட்ட அலுவலர் இடத்தை பார்வையிட்டு முறை மாற்ற திறப்பானை சீல் செய்து அனுமதி வழங்க வேண்டும். மேற்கண்ட நாட்களுக்குள் உரிமையாளரிடமிருந்து அனுமதிக் கிடைக்கப் பெறாத நிலையில் விவசாய அவசர நிமித்தம் காரணமாக முறை மாற்ற திறப்பானை குறிப்பிட்ட விவசாய தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மின் நுகர்வோருக்கு முறை மாதத்திற்கு ஒருமுறை அனுமதி அளிக்கப்பட்ட பின் ஒவ்வொரு முறையும் விவசாயம் சம்பந்தப்பட்ட செயல் மாற்றத்திற்கு தனித்தனியாக அனுமதி பெற தேவையில்லை என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.