மங்களகரமான நாளில் பத்திரப்பதிவு அலுவலகம் திறக்கலாம்.. பதிவுக்கு கூடுதல் கட்டணம்.. பீலா ராஜேஷ் அதிரடி உத்தரவு.!

By Asianet TamilFirst Published Apr 13, 2021, 8:39 PM IST
Highlights

மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவு செய்தால் அதற்கு கூடுதல் கட்டணம் வசூலித்துக்கொள்ளலாம் என்று தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
 

தமிழக முதன்மைச் செயலாளர் பீலா ராஜேஷ் பத்திரப்பதிவு துறை தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “பத்திரப்பதிவு துறையின் வருவாயைப் பெருக்கும் வகையில், சித்திரை முதல் நாளான (14.04.2021), ஆடிப்பெருக்கு நாளான (03.08.2021), மற்றும் தைப்பூசம் நாளான (18.01.2022) ஆகிய மங்களகரமான நாட்களில் பதிவு அலுவலங்களை செயல்பாட்டில் வைத்தால், பொதுமக்களால் சொத்து பரிமாற்றம் குறித்த ஆவணங்கள் பதிவுக்கு தாக்கல் செய்திட ஏதுவாக இருக்கும்.
அத்தகைய நாட்களில் செயல்பாட்டில் வைத்திடவும், அத்தகைய விடுமுறை நாட்களில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதிக்குமாறு பத்திரப்பதிவு துறை தலைவர் கோரிக்கை விடுத்திருந்தார். அந்த கோரிக்கையை அரசு கவனமுடன் பரிசீலனை செய்ததில், சித்திரை முதல் நாளான (14.04.2021), ஆடிப்பெருக்கு நாளான (03.08.2021), மற்றும் தைப்பூசம் நாளான (18.01.2022) ஆகிய மங்களகரமான நாட்களில் பதிவு அலுவலங்களை செயல்பாட்டில் வைத்து பதிவினை மேற்கொள்ளவும் மற்றும் அத்தகைய நாட்களில் மேற்கொள்ளப்படும் ஆவணப்பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் சித்திரை முதல் நாளான நாளை பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறந்திருக்கும் என்று அரசு தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. 

click me!