
தமிழகத்தில் விரைவில் நகரும் ரேஷன் கடைகள் தொடங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். கொரோனா காலத்தில் விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கான கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருவதால், சென்னையில் ஓரளவுக்கு தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. ஆனால் மாவட்டங்களில் வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதேபோல் தமிழகத்தில் தொடர் ஊடரங்கு காரணமாக மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதில் அரசு உரிய கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் மக்களுக்கு தேவையான, அரசி, பருப்பு , உள்ளிட்ட உணவு பொருட்கள் ரேஷன் கடைகளில் தடையின்றி கிடைக்க அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்நிலையில் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில கூட்டுறவு துறை பதிவாளர் அலுவலகத்தில், கூட்டுறவு துறை அதிகாரிகளுடன், வரக்கூடிய நாட்களில் எடுக்க வேண்டிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:- கூட்டுறவு துறைக்கான அடுத்த கட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தேன். கூட்டுறவு வங்கிகளை அடுத்தகட்டிற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம். விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்கடன் கொடுத்து வருகிறோம். எனவே கொரோனா காலத்தில் விவசாயிகளுக்கு கடன் தள்ளபடி என்பது கிடையாது. விவசாயிகளுக்கு பயிர் கடன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுவருகிறது என்ற அவர், தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து விரைவில் நகரும் ரேஷ்ன் கடைகள் தொடங்கப்படும். சென்னையில் 400 நகரும் ரேஷன் கடைகள் வர வாய்ப்புள்ளது. என அப்போது அவர் தெரிவித்தார்.