போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிளும் தோல்வி அடைந்தது வெட்கக்கேடு என்று பாமக தொண்டர்களை கடுமையாக விமர்சித்துள்ளார் ராமதாஸ்.
கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா. ம. க சார்பில் ஒருங்கிணைந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ், ‘10. 5 சதவீதம் உள் ஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. சிறப்பான வழக்கறிஞரை நியமனம் செய்துள்ளது. எனவே, தடை உத்தரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. வரும் தேர்தலில் பா. ம. க வெற்றி பெற்று அன்புமணி ராமதாஸ் முதல்வராக கட்சியினர் சபதம் ஏற்க வேண்டும்.
இதற்காக திண்ணை பிரசாரம், சமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்தி மக்களிடையே செல்ல வேண்டும். கட்சி பதவியில் இருக்கும் மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் நமது பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெற பாடுபட வேண்டும். அப்படி இல்லை என்றால், உங்களுக்கு எதற்கு பதவி உங்களுக்குப் பதிலாக மாடு மேய்ப்பவர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுக்கலாம்’ என்று கிண்டலாக பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘உள்ளாட்சி தேர்தலில் மற்ற கட்சியினரிடையே விலை போனவர்களால் தான் தோற்றோம்.கடந்த சட்டப்பேரவை தேர்தலில் உட்கட்சியில் ஏற்பட்ட பிரச்சனையால் தோற்றோம். தமிழகத்தில் நடைபெற்ற 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி 23 லட்சம் ஓட்டுகள் போட்டு 5. 6 சதவீதம் பெற்றதாக கூறுகின்றனர். தமிழகத்தில் 3வது பெரிய கட்சியாக இருப்பது எனக்கு வெட்கமாக இருக்கிறது. இந்த கட்சி இளைஞர்களின் கைகளில் தான் இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிட ஆள் இல்லை என்கின்றனர். ஆளில்ல என்றால் அந்தமானில் இருந்து 50 பேரை அழைத்து வருவேன்’ என்று பேசினார்.