அவங்க குற்றம் செய்யலன்னு சொல்லல... ஒட்டுமொத்த தமிழகமும் உங்களை மன்றாடுகிறது... உருக்கமாக கடிதம் எழுதிய ராமதாஸ்!!

By sathish kFirst Published Jun 13, 2019, 4:11 PM IST
Highlights

7 தமிழர்களையும் குற்றமற்றவர்கள் என்று கூறி விடுதலை செய்யும்படி யாரும் கோரவில்லை. அவர்கள் அனுபவிக்க வேண்டிய தண்டனையை விட அதிகமாக சிறைவாசம் அனுபவித்து விட்ட நிலையில், கருணை அடிப்படையில் விடுதலை செய்யுங்கள் என்று தான் ஒட்டுமொத்த தமிழகமும் உங்களை மன்றாடுகிறது என உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

7 தமிழர்களையும் குற்றமற்றவர்கள் என்று கூறி விடுதலை செய்யும்படி யாரும் கோரவில்லை. அவர்கள் அனுபவிக்க வேண்டிய தண்டனையை விட அதிகமாக சிறைவாசம் அனுபவித்து விட்ட நிலையில், கருணை அடிப்படையில் விடுதலை செய்யுங்கள் என்று தான் ஒட்டுமொத்த தமிழகமும் உங்களை மன்றாடுகிறது என உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

மேதகு தமிழக ஆளுனர் பன்வாரிலால் அவர்களுக்கு,

பொருள்: 29 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை தமிழக அமைச்சரவைத் தீர்மானத்தின் அடிப்படையில் விடுதலை செய்யக் கோருதல் - தொடர்பாக
தமிழ்நாட்டு மக்களின் நீண்டநாள் கோரிக்கை மற்றும் தமிழக அமைச்சரவையின் மனிதநேய அடிப்படையிலான பரிந்துரை குறித்து தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த கோரிக்கை மனுவை மேதகு தமிழக ஆளுனராகிய தங்களின் பார்வைக்கு முன்வைக்கிறேன்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு தொடக்கத்தில் தூக்கு தண்டனை விதிக்கப் பட்டு, பின்னர் பல்வேறு காலகட்டங்களில் ஆயுள் தண்டனையாக குறைக்கப் பட்டது. இவர்கள் அனைவரும் 1991-ஆம் ஆண்டு முதல் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

பொதுவாக வாழ்நாள் சிறை தண்டனை என்பது நடைமுறையில் 14 ஆண்டுகள் என்றே கணக்கிடப் பட்டு, தண்டனைக் காலத்தை கழித்தவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர். தலைவர்களின் பிறந்த நாள்கள், இந்திய விடுதலை நாள், குடியரசு நாள் உள்ளிட்ட சிறப்பு நிகழ்வுகளில் குறைந்த காலமே தண்டனை அனுபவித்த வாழ்நாள் சிறைதண்டனை கைதிகள் கூட நன்னடத்தையின் அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுகின்றனர். அண்மையில் கூட மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் நூற்றாண்டையொட்டி 10 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவு செய்த சுமார் 1500 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அதற்கான உத்தரவில் தாங்கள் தான் ஆணையிட்டீர்கள். இதேபோல் பலகட்டங்களில் ஆயுள் தண்டனை கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 29 ஆண்டுகளாக சிறைகளில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கும் இந்த சலுகை மனிதநேய அடிப்படையில் வழங்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், 28 ஆண்டுகள் முழுமையாக சிறை தண்டனையை அனுபவித்து முடித்த பிறகும் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கவில்லை. பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்கு தண்டனை கடந்த 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாளே அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டது, ஆனால், மத்திய அரசின் எதிர்ப்பு காரணமான அது கைகூடவில்லை.

7 பேர் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள், விளக்கம் கேட்கும் நிகழ்வுகள், அரசியலமைப்பு சட்ட அமர்வின் விசாரணை என நான்கரை ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், 7 தமிழர்கள் விடுதலை தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 6 -ஆம் தேதி அளித்தத் தீர்ப்பில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய மாநில ஆளுனருக்கு அதிகாரம் உண்டு என்று ஆணையிட்டது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் 9-ஆம் தேதி கூடிய தமிழக அமைச்சரவை, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 161&ஆவது பிரிவின்படி அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி 7 தமிழர்களையும் விடுதலை செய்யும்படி தங்களுக்கு பரிந்துரை செய்தது. ஆனால், அந்த பரிந்துரை தங்களுக்கு அனுப்பப்பட்டு இன்றுடன் 276 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இன்று வரை அதன்மீது எந்த முடிவையும் தாங்கள் எடுக்காதது வருத்தமளிக்கிறது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்யும் விஷயத்தில் தங்களுக்கு கட்டற்ற அதிகாரம் உள்ளது என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். இதை உச்சநீதிமன்றமும் அண்மையில் உறுதி செய்ததுடன், இந்த விஷயத்தில் தமிழக ஆளுனர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என்றும் ஆணையிட்டது. உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து ஒரு மாதத்திற்கு மேலாகி விட்ட போதிலும் 7 தமிழர்கள் விடுதலை குறித்து தாங்கள் முடிவெடுக்காததன் நியாயத்தை புரிந்துகொள்ள முடியவில்லை.

7 தமிழர்கள் விடுதலைக்கு சட்டப்படியாக எந்தத் தடையும் இல்லை, அது குறித்து முடிவெடுக்க தமிழக ஆளுனராகிய தங்களுக்கு அனைத்து அதிகாரங்களும் உள்ளன, 7 தமிழர்களை விடுதலை செய்ய மாநில அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது, ஒட்டுமொத்த தமிழகமும் 7 தமிழர்களின் விடுதலையை ஆவலுடன் எதிர்பார்க்கிறது. 7 தமிழர்கள் விடுதலைக்கு ஆதரவாக இவ்வளவு அம்சங்கள் இருக்கும் நிலையில், இந்த விஷயத்தில் முடிவெடுக்க ஆளுனராகிய தாங்கள் தயங்குவது ஏன்? எனப் புரியவில்லை.

தமிழகத்தின் ஆளுனராகிய நீங்கள் தலைசிறந்த இலக்கியவாதியும் ஆவீர்கள். மனித அன்பையும், அன்புக்கான ஏக்கத்தையும் புரிந்து கொள்ளும் சக்தி உங்களுக்கு உண்டு. விளையாடச் சென்ற குழந்தை குறித்த காலத்தில் திரும்பி வராவிட்டால் அக்குழந்தையின் தாய் எவ்வாறு துடித்துப் போவாள் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். ஆனால், இங்கு ஒரு தாய் தமது மகன் எந்த தவறும் செய்யவில்லை என்ற நம்பிக்கையில், ராஜிவ்காந்தி கொலைவழக்கு விசாரணைக்காக 28 ஆண்டுகளுக்கு முன் தமது மகனை சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டு, இப்போது வரை மகனின் வருகைக்காக வழி மீது விழி வைத்து காத்திருக்கிறார். இன்னொரு தாய் சிறையில் பெற்றெடுத்த மகளை வெளிநாட்டில் குடும்பத்தினரிடம் ஒப்படைத்து விட்டு, இன்று வரை நேரில் சந்தித்து கொஞ்சி மகிழ முடியாமல் தவிக்கிறார். இந்த துயரங்களை ஒரு குடும்பத் தலைவராக புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

பேரறிவாளன் போன்றவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை; திரிக்கப்பட்ட வாக்குமூலத்தால் தான் அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்பது பலருக்கும் தெரியும். இருப்பினும், 7 தமிழர்களையும் குற்றமற்றவர்கள் என்று கூறி விடுதலை செய்யும்படி யாரும் கோரவில்லை. அவர்கள் அனுபவிக்க வேண்டிய தண்டனையை விட அதிகமாக சிறைவாசம் அனுபவித்து விட்ட நிலையில், கருணை அடிப்படையில் விடுதலை செய்யுங்கள் என்று தான் ஒட்டுமொத்த தமிழகமும் உங்களை மன்றாடுகிறது. எனவே, இனியும் தாமதிக்காமல் தமிழக அமைச்சரவைத் தீர்மானத்தின் அடிப்படையில் 7 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய உரிய ஆணைகளை பிறப்பிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் முதலமைச்சர் கூறியிருக்கிறார். கடிதத்தின் நகல் ஆளுனர் மற்றும் முதலமைச்சர் அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என இவ்வாறு கூறியுள்ளார்.

click me!