ரூ.10,000 விலைபேசி 20 ரூபாய் நோட்டை தந்த புரட்சியும்! எம்.ஜி.ஆருடன் நடித்ததால் பதவியும்? வேறு புரட்சிகள் நடக்குமோ? கிழித்து தொங்கவிட்ட ராமதாஸ்

Asianet News Tamil  
Published : Apr 28, 2018, 12:11 PM ISTUpdated : Sep 19, 2018, 02:18 AM IST
ரூ.10,000 விலைபேசி 20 ரூபாய் நோட்டை தந்த புரட்சியும்! எம்.ஜி.ஆருடன் நடித்ததால் பதவியும்? வேறு புரட்சிகள் நடக்குமோ? கிழித்து தொங்கவிட்ட ராமதாஸ்

சுருக்கம்

Ramadoss wrote about admk Revolution

புரட்சிக் கலைஞர், புரட்சித் தமிழன், புரட்சித் தளபதி என தமிழகத்தில் புரட்சிகளுக்கு குறைவே இல்லை. இதுதான் இப்படி என்றால், புரட்சிகரமான செயல்களுக்கும் குறைவில்லை என புரட்சியை தாறுமாறாக கிழித்துள்ளார் டாக்டர் ராமதாஸ்.

என்ன ஆது? அவர் பதிவில், நல்லவேளை.... சேகுவேரா, ஃபிடல் காஸ்ட்ரோ, வேலுப்பிள்ளை பிரபாகரன், ஸ்டாலின் ( இவர் ஜோசப் ஸ்டாலின்), ஜார்ஜ் வாஷிங்டன், மார்ட்டின் லூதர்கிங், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், நெல்சன் மண்டேலா, யாசர் அராஃபத் போன்ற தலைவர்கள் இப்போது உயிருடன் இல்லை.

அவர்கள் உயிருடன் இருந்திருந்தால் தமிழகத்தில் புரட்சி என்ற வார்த்தை படும் பாட்டைப் பார்த்து மன அழுத்தம் தாங்க முடியாமல் வெடித்திருப்பார்கள். அந்த அளவுக்கு தமிழகத்தில் புரட்சி என்பது தகுதி குறைந்த, கேவலமான, யார் வேண்டுமானாலும் சூட்டிக் கொள்ளக்கூடிய பட்டமாக மாறி விட்டது.

கியூபாவில் பாடிஸ்டா என்ற கொடுங்கோலனின் ஆட்சியை அகற்றுவதற்காக ஃபிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து விரல் விட்டு எண்ணக்கூடிய போராளிகளுடன் போராடி வென்று, நாட்டை காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்து விட்டு, அடுத்து புரட்சி செய்வதற்காக அர்ஜென்டினாவுக்கு சென்ற சேகுவேரா போராளி அல்லது புரட்சியாளன் என்று தான் அழைக்கப்படுகிறார்.

நான்கு நண்பர்களுடன் இணைந்து விடுதலைப்புலிகள் அமைப்பை உருவாக்கி உலகமே வியக்கும் வண்ணம் தரைப்படை, கடற்படை, விமானப்படை என முப்படைகளை உருவாக்கி, இலங்கைக்குள் தனி ஈழத்தை உருவாக்கி நிர்வகித்த பிரபாகரனை இந்த உலகம் போராளி என்று தான் அழைக்கிறது.
ஆனால், இத்தகைய போராட்டங்கள் எதையும் செய்யாமல் திரைப்படங்களில் பாட்டிகளை கட்டிப்பிடித்து கருணையின் சின்னமாக காட்டிக் கொண்டு ஆட்சியைப் பிடித்த எம்.ஜி.ஆருக்கு போராளி பட்டம் போதுமானதில்லையாம். அதையும் தாண்டி அவர் புரட்சித் தலைவராம்.

சரி... அது போகட்டும் என்றால் எம்.ஜி.ஆருடன் சில படங்களில் இணைந்து நடித்த ஒரே காரணத்திற்காக ஜெயலலிதாவுக்கும் அதே பதவி, புரட்சித் தலைவி பட்டம்.
கொஞ்சம் அசந்திருந்தால் ஜெயலலிதாவுக்கு உடன்பிறவா சகோதரியாக இருந்ததற்காக சசிகலாவுக்கும் அதே பதவியும், புரட்சிப் பெருந்தலைவி பட்டமும் வழங்கப்பட்டிருந்திருக்கும். ஆனால், தூங்கிக் கொண்டிருந்த உச்சநீதிமன்றம் திடீரென விழித்துக் கொண்டதால் தமிழ்நாடு தப்பியது.
அதுமட்டுமின்றி....

புரட்சிக் கலைஞர், புரட்சித் தமிழன், புரட்சித் தளபதி என தமிழகத்தில் புரட்சிகளுக்கு குறைவே இல்லை.
இதுதான் இப்படி என்றால், புரட்சிகரமான செயல்களுக்கும் குறைவில்லை.

புரட்சித் தலைவராலும், புரட்சித் தலைவியாலும் வளர்க்கப்பட்ட கட்சி மூன்றாக உடைந்து சிதறுகிறது. பணம் உள்ளவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குகின்றனர். கூவத்தூர், புதுச்சேரி, குடகு என சொகுசு மாளிகைகள் உள்ள இடங்களுக்கெல்லாம் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அவர்களுக்கு கோடிகளில் பண அபிஷேகம் நடத்தப்படுகிறது. குதிரைபேரத்தின் உதவியுடன் மைனாரிட்டி அரசு நடத்தப்படுகிறது. இது ஒரு மெகா புரட்சி.

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்கும் புரட்சியைக் கேள்விப்பட்டிருப்போம். இரட்டை இலை சின்னத்தை வாங்குவதற்காக தேர்தல் ஆணையத்திற்கே லஞ்சம் கொடுக்க முயன்ற புரட்சியும் தமிழகத்தில் தான் நடந்திருக்கிறது.

அதுமட்டுமின்றி, ஓட்டுக்கு ரூ.10,000 விலைபேசி அதற்கான அடையாளமாக 20 ரூபாய் நோட்டை கொடுத்த புரட்சியும் இந்தியாவின் 29 மாநிலங்களில் வேறு எங்கும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும் தான் நடந்திருக்கிறது. இதேபோல் ஏராளமான புரட்சிகள் தமிழகத்தில் நடந்துள்ளன. அவற்றை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது.

இதுபோன்ற புரட்சிகளால் தமிழ்நாடு உலக அரங்கில் பங்கப்பட்டு, அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு நிற்கிறது. தமிழ்நாடு மட்டுமல்ல... புரட்சி என்ற வார்த்தையும் கூட அதே அளவு அவலத்தை சந்தித்துள்ளது.இத்தகைய புரட்சிகள் தான் நடைபெறுகின்றனவே தவிர தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு தேவையான பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, பாசனப்புரட்சி போன்றவை மட்டும் தமிழகத்தில் நடைபெறுவதில்லை.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க இன்னொரு பெரும் புரட்சியும் தமிழகத்தில் நடைபெற்றிருக்கிறது. அதுவும் வேலூர் கோட்டையில்...
‘‘அது தான் எங்களுக்குத் தெரியுமே.... 1806-ஆம் ஆண்டு ஜூலை 10-ஆம் தேதி வேலூர் கோட்டையில் சிப்பாய் கலகம் நடந்தது. இது தெரியாதா?’’ என்று சிலர் துடிப்பது தெரிகிறது. ஆனால், இது அதுவல்ல...

கடந்த சில நாட்களுக்கு முன் வேலூர் கோட்டையில் மூன்று மாணவிகள் மது அருந்தி, அதுவும் பீர் பாட்டிலை வாயால் கடித்து திறந்து, நடனமாடி, அதை அவர்களில் ஒருவரே வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள். சிப்பாய் கலகம் நடந்த இடத்தில் ஒரு சீப்பான கலாச்சாரம். இதுவல்லவோ புரட்சி. கேவலமான புரட்சிகள் ஆளும் மாநிலத்தில் இத்தகைய கேவலமான புரட்சிகள் தான் நடக்கும். இன்னும் என்னென்ன புரட்சிகள் நடக்குமோ?
வாழ்க புரட்சியின் தாயகம் தமிழ்நாடு! வளர்க டாஸ்மாக் வணிகம்!!

PREV
click me!

Recommended Stories

12,000 அடி உயரத்தில் பதுங்கு குழியில் ஜெய்ஷ் பயங்கரவாதிகள்..! உயிர் பிழைக்க பதுக்கிய அரசி- மேகி..!
ஆளுநரின் தேநீர் விருந்து.. ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கும் திமுக கூட்டணி கட்சிகள்!