
தமிழகத்தில் எந்த மருத்துவமனைக்குச் சென்றாலும் குழந்தைகளை டெங்குவுக்கு பறிகொடுத்த மக்களின் ஓலம் தான் எதிரொலிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். மேலும் தமிழக மக்களின் சாபத்திலிருந்து முதல்வர் பழனிசாமி தப்ப முடியாது என்றும் ராமதாஸ் கொந்தளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெங்குவால் மணிக்கு ஒரு உயிர் பிரிந்துகொண்டிருக்கும் நிலையில், முதல்வரும அமைச்சரும் புதுக்கோட்டையில் குதூகலித்துக் கொண்டிருக்கின்றனர்.
டெங்குவைக் கட்டுப்படுத்த தமிழக ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காததன் விளைவாக தினமும் சராசரியாக 15 பேர் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். நேற்று ஒரே நாளில் 18 பேர் டெங்குவிற்கு பலியாகியுள்ளனர்.
டெங்குவைக் கட்டுப்படுத்த முடியாத தமிழக அரசு, இதற்காக மத்திய அரசிடமோ பிற மாநிலங்களிடமோ எந்தவித உதவியையும் கோரவில்லை. மத்திய அரசு தானாக முன்வந்து மருத்துவக் குழுவை தமிழகத்துக்கு அனுப்பியுள்ள நிலையில், டெங்குக் காய்ச்சல் குறித்த உண்மை நிலையை அக்குழுவிடம் தமிழக அரசு தெரிவிக்கவில்லை. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் டெங்குக் காய்ச்சலுக்கு 100 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெங்குவால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 30 ஆயிரமாகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 250 ஆகவும் அதிகரித்துள்ளது. ஆனால், டெங்குக் காய்ச்சலுக்கு இதுவரை 12,000 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 40 பேர் மட்டுமே உயிரிழந்திருப்பதாகவும் பொய்யான தகவலை மத்திய அரசுக்கு தமிழக அரசு கொடுத்திருக்கிறது.
டெங்குக் காய்ச்சல் பாதிப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இப்போதுதான் கொசு மருந்து அடிப்பது உள்ளிட்ட தேவைகளுக்காக ரூ.256 கோடி நிதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்திருக்கிறது. இதன்மூலம் நோய்த்தடுப்பு பணிகளை தமிழக அரசு இன்று வரை தொடங்கவில்லை என்பது ஐயத்துக்கு இடமின்றி உறுதியாகிறது.
டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளாமல் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் புதுக்கோட்டையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட சென்றுள்ளனர். டெங்கு ஆபத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, துதிபாடிகளை மேடையிலேற்றி தமது புகழைப் பாடச் சொல்லி கேட்பதிலும், அரசு செலவில் அமைக்கப்பட்ட மேடையில் அரசியல் எதிரிகளை விமர்சிப்பதிலும்தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுகம் கண்டுகொண்டிருக்கிறார்.
தமிழகத்தில் எந்த மருத்துவமனைக்குச் சென்றாலும் குழந்தைகளை டெங்குவுக்கு பறிகொடுத்த மக்களின் ஓலம்தான் எதிரொலிக்கிறது. தமிழக அரசு மின்னல் வேகத்தில் செயல்பட்டு, மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ள மக்களைக் குணப்படுத்தி பத்திரமாக வீடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் சொந்தங்களை இழந்த மக்களின் சாபத்திலிருந்து தமிழக ஆட்சியாளர்கள் தப்ப முடியாது என்று கூறியுள்ளார்.