
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக 66.65 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக பெங்களூரு தனி நீதிமன்றத்தில் சுப்ரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.
இதைதொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குன்ஹா ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் மற்ற 3 பேருக்கு தலா ரூ.10 கோடி அபராதமாக விதித்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா உள்பட 4 பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி, மனுதாரர்கள் பேரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து தி.மு.க. மற்றும் கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உறுதி செய்தது.
மேலும் நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பின்படி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை மற்றும் தலா ரூ.10 கோடி அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டது.
இதைதொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சரணடைந்தனர். அங்கு சாதாரண அறையில் சசிகலா தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், சசிகலாவுக்கு ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் உள்பட சில நோய்கள் இருக்கின்றன. இதற்கு சென்னையில் உள்ள மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அதே மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும்.
மேலும், கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் தங்கியிருந்த எம்எல்ஏக்கள் சிலர் தாக்கப்பட்டதாக கூவத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரின்பேரில் சசிகலா உள்பட 4 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக சசிகலாவின் தமிழகத்தை சேர்ந்தவர். அவரது உறவினர்கள் அனைவரும் தமிழகத்தில் உள்ளனர். சசிகலாவை பார்க்க வேண்டுமானால், உறவினர்கள் பெங்களூருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதேபோல், மேற்கண்ட வழக்குகள் விசாரணைக்கு சசிகலா அடிக்கடி சென்னை செல்ல வேண்டும்.
எனவே, உடல்நிலை மற்றும் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியுள்ளதால், பெங்களூர் சிறையில் இருந்து சென்னைக்கு மாற்றுவதற்கு அதிமுக வழக்கறிஞர்கள் சிலர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் சசிகலா, சென்னை சிறைச்சாலைக்கு மாற்றப்படுவார் என கூறப்படுகிறது.
இந்நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது டுவிட்டர் பக்கத்தில், சசிகலாவை சென்னை சிறைச்சாலைக்கு மாற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், சசிகலா சென்னை க்கு மாற்றப்ப்படுவதாக செய்தி வெளியாகி உள்ளது. இதனை அனுமதிக்க முடியாது. மீறி, அவர் சென்னைக்கு மாற்றப்பட்டால், உச்சநீதிமன்றத்தை அணுகி, அதனை தடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.