
உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தமிழகத்திற்கான பிரதிநிதித்துவம் குறையக் கூடாது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திற்காக 5 உயர்நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட பட்டியலை மத்திய அரசுக்கு கொலீஜியம் அனுப்பியுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள ராமதாஸ், அதில் தமிழகத்தைச் சேர்ந்த எவரும் இடம் பெறாதது அதிர்ச்சியும், வருத்தமும் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை மூடுதல் போன்ற தீர்ப்புகளை வழங்கிய, தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுமான பால் வசந்தகுமாரின் பெயர், பட்டியலில் இடம்பெறாதது ஏமாற்றமளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
இதன்மூலம் உச்சநீதிமன்றத்தில் தமிழகத்திற்கான பிரதிநிதித்துவம் வெகுவாக குறைந்திருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மீதமுள்ள 3 நீதிபதிகள் பணியிடங்களுக்கான பெயர் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்தவரின் பெயர் இடம்பெற வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.