இன்னும் எத்தனை வருஷத்துக்கு தான் இதே கதி? வேதனையை கொட்டித் தீர்த்த ராமதாஸ்...

By sathish kFirst Published Jun 30, 2019, 5:09 PM IST
Highlights

இந்த ஆண்டும் மருத்துவப் படிப்புகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலும், ஊரக மாணவர்கள் எண்ணிக்கை இரட்டை இலக்கத்திலும் இருக்கும். மீதமுள்ள சுமார் 98 விழுக்காடு இடங்களை நகர்ப்புற பணக்கார மாணவர்கள் தான் கைப்பற்றப் போகிறார்கள் இதே கதி இன்னும் எத்தனை வருஷத்துக்கு நடக்கும் என கேள்வியெழுப்பியுள்ளார்.
 

இந்த ஆண்டும் மருத்துவப் படிப்புகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலும், ஊரக மாணவர்கள் எண்ணிக்கை இரட்டை இலக்கத்திலும் இருக்கும். மீதமுள்ள சுமார் 98 விழுக்காடு இடங்களை நகர்ப்புற பணக்கார மாணவர்கள் தான் கைப்பற்றப் போகிறார்கள் இதே கதி இன்னும் எத்தனை வருஷத்துக்கு நடக்கும் என கேள்வியெழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சமூக நீதிக்கும், கிராமப்புற ஏழை மாணவர்களுக்கும் எதிரான நீட் தேர்வு உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தான் நடத்தப்படுவதாகவும், அது ரத்து செய்யப்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் மத்திய அரசின் சார்பில் தொடர்ந்து வாதிடப்பட்டு வருகிறது. ஆனால், நீட் தேர்வு நீடிக்க வேண்டும் என்பதற்கு எந்த நியாயமும் உச்சநீதிமன்றத்தால் கற்பிக்கப்படவில்லை என்பது தான் உண்மையாகும்.

நீட் தேர்வு ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் எதிரானது; சமூகநீதிக்கு எதிரானது என்பதை நிரூபிக்க ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில் 39.56% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு அதைவிட 9.01% அதிகமாக 48.57% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது போன்ற புள்ளிவிவரங்கள் எல்லாம் நமக்கு நாமே திருப்தி அடைவதற்கு வேண்டுமானால் உதவுமே தவிர, பெருமைப்பட்டுக் கொள்ள எந்த வகையிலும் உதவாது. நடப்பாண்டில் நீட் தேர்வில் 300-க்கும் கூடுதலான மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 14,443 ஆகும். இவர்களில் 8688 பேர் 12&ஆம் வகுப்பை கடந்த ஆண்டு முடித்த பழைய மாணவர்கள் ஆவர்.

இவர்கள் அனைவருமே கடந்த ஓராண்டாக நீட் தேர்வுக்கு தனிப்பயிற்சி பெற்று, அதன்பயனாகவே தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் தவிர மீதமுள்ளோரிலும் 90 விழுக்காட்டினர் தனிப்பயிற்சி பெற்றதால் தேர்ச்சி பெற்றவர்கள் தான். நடப்பாண்டில் மருத்துவப் படிப்பில் சேரக்கூடிய வாய்ப்புள்ளவர்களில் 95 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்கள் நீட் தனிப்பயிற்சி பெற்றவர்கள் ஆவர். 50%க்கும் கூடுதலானோர் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படித்தவர்கள் ஆவர். வழக்கம் போலவே, இந்த ஆண்டும் மருத்துவப் படிப்புகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலும், ஊரக மாணவர்கள் எண்ணிக்கை இரட்டை இலக்கத்திலும் இருக்கும். மீதமுள்ள சுமார் 98 விழுக்காடு இடங்களை நகர்ப்புற பணக்கார மாணவர்கள் தான் கைப்பற்றப் போகிறார்கள். இதுவா சமூகநீதி என்பது தான் எனது வினா?

1984-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு இருந்த போதும் இதே போன்று தான் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு சமூக அநீதி இழைக்கப்பட்டது. பாமக நடத்திய அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்களின் பயனாக 2007-ஆம் ஆண்டு நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட பிறகு தான் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் கிராமப்புற மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் சேர முடிந்தது. நீட் தேர்வு காரணமாக 35 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைமை மீண்டும் ஏற்பட்டுள்ளது. நீட் ரத்து செய்யப்பட்டால் தான் தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் சமூகநீதியை நிலைநாட்ட முடியும்.

நீட் தேர்வு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததால் தான் அத்தேர்வு நடத்தப்படுவதாக மத்திய அரசு கூறுவது பிழையானது ஆகும். 2011-ஆம் ஆண்டில் நீட் தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், 2012 முதல் அது நடத்தப்படுவதாக இருந்தது. பின் 2013-ஆம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. அதே ஆண்டில் நீட் தேர்வை உச்சநீதிமன்றம் ரத்து செய்து விட்டது. அதை எதிர்த்து அப்போதைய காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நீட் தேர்வு ரத்து என்று ஏற்கனவே அளிக்கப்பட்ட தீர்ப்பு அவசர கதியில் வழங்கப்பட்டது என்றும், நீட் தேர்வுக்கு எதிரான வழக்கு மீண்டும் புதிதாக விசாரிக்கப்படும் என்று 11.04.2016 அன்று தீர்ப்பளித்தது.

அத்தீர்ப்பு வெறும் 4 பக்கங்களை மட்டுமே கொண்டது. அதிலும் கூட வழக்கு விவரங்கள் குறித்த பத்திகளை தவிர்த்து விட்டு பார்த்தால் வெறும் 4 வரிகள் மட்டுமே இருக்கும். அதிலும் கூட நீட் தேர்வை ரத்து செய்து 2013-ஆம் ஆண்டில் அளிக்கப்பட்ட தீர்ப்பை செல்லாது என அறிவித்ததற்கான காரணங்கள் எதுவும் கூறப்படவில்லை. நீட் தேர்வுக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்கும் போது, அது பற்றி விவாதிக்கப்படும் என்று நீதிபதி அனில் தவே தலைமையில் நீதிபதிகள் ஏ.கே சிக்ரி, ஆர்.கே. அக்ரவால், ஏ.கே.கோயல், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வு அறிவித்தது. அதன்பின் இப்போது வரை கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. தீர்ப்பளித்த 5 நீதிபதிகளில் நீதிபதி பானுமதி தவிர மீதமுள்ள 4 நீதிபதிகள் ஓய்வு பெற்று விட்டனர். ஆனால், இன்று வரை நீட் தேர்வுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதற்கு காரணமும் தெரியவில்லை.

நீட் தேர்வு ரத்து என்று அளிக்கப்பட்ட தீர்ப்பு செல்லாது என்று 2016-ஆம் ஆண்டில் அரசியலமைப்பு சட்ட அமர்வு பிறப்பித்த ஆணை, நீட் தேர்வுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வரைக்கான இடைக்கால ஏற்பாடு தான் என்பதை சட்ட வல்லுனர்கள் அனைவரும் ஒப்புக் கொள்வார்கள். அத்தீர்ப்பு அளிக்கப்பட்ட அடுத்த சில மாதங்களில் நீட் தேர்வுக்கு எதிரான முதன்மை வழக்கு விசாரிக்கப்பட்டு இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மூன்றரை ஆண்டுகள் ஆன பிறகும் அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாததும், இடைக்கால ஏற்பாடாக வழங்கப்பட்ட தீர்ப்பை வைத்துக் கொண்டு தொடர்ந்து நீட் தேர்வு நடத்தப்படுவதும் அறமல்ல.

2016-ஆம் ஆண்டு நீட் வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட காலகட்டத்திற்கும், இப்போதைக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. இடைப்பட்ட மூன்றரை ஆண்டுகளில், நீட் தேர்வின் நோக்கங்கள் எதுவும் நிறைவேறவில்லை என்பது உறுதியாகி விட்டது. இத்தகைய சூழலில் நீட் தேர்வுக்கு எதிரான வழக்கை விரைந்து விசாரிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்; இல்லாவிட்டால் அந்த வழக்கு விசாரித்து முடிக்கப்படும் வரை நீட் தேர்வை நிறுத்தி வைக்க வேண்டும். நீட் வழக்கில் தமிழக அரசும் ஒரு தரப்பு என்பதால் அந்த வழக்கை விரைந்து விசாரணைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக் கூறியுள்ளார்.

click me!