ஏழு தொகுதியில் குஷியான ராமதாஸுக்கு ஏழரையை இழுத்துவிடும் வேல்முருகன்... அ.தி.மு.க. பா.ம.க. கூட்டணிக்கு கொல பயத்தை காட்டும் காடுவெட்டி குரு மரணம்..!

By Vishnu PriyaFirst Published Feb 19, 2019, 1:41 PM IST
Highlights

பா.ம.க.வில் கோலோச்சி பின் வெளியேறி தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் இப்போது ஒரு பகீர் ஸ்டேட்மெண்டை தட்டியுள்ளார். அதில் ‘காடுவெட்டி குருவின் மரணம் தொடர்பாக நான் நிறைய தகவல்களை சேர்த்து வைத்துள்ளேன். கூடிய விரைவில் இந்த உண்மைகளை வெளியிடுவேன். அப்போது சிலரின் முகச்சாயம் வெளுக்கும்.’ என்று பெரும் புதிர்போட்டு ஏழரையை இழுத்துள்ளார். 

’திராவிட கட்சிகளுடன் இனி கூட்டணி என்பதே கிடையாது. அப்படியொரு தவறை செயத்தற்காக தமிழக மக்கள் எங்களை மன்னிக்க வேண்டும்.’ டாக்டர். ராமதாஸ் எழுதிய இந்த ப்ரிஸ்க்ரிப்ஷனை அவர் வேண்டுமானால் மறந்திருக்கலாம். ஆனால் தமிழ்நாடு மறக்கவேயில்லை. 

நாடாளுமன்ற தேர்தலை ஜெட் வேகத்தில் நெருங்கிக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க. விருப்பமனு விநியோகத்தை முடித்துவிட்டவர்கள், இப்போது கூட்டணி விஷயத்திலும் முக்கிய முடிவை முதல் ஆளாக அறிவித்துவிட்டார்கள். ஆம் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. இருக்கப்போகிறது என்று பரபரப்பாக பேசப்பட்டது. இன்று காலை வரை இதை ஹேஸ்யம், வதந்தி, அன்புமணியே ‘இரு திராவிட கட்சிகளுடனும் பேசுகிறோம்’ என்று கூறியுள்ளதை கவனியுங்கள்! எனவே இது அனுமானம்தான்...என்றெல்லாம் சொல்லி வந்த நிலையில் இதோ சில நிமிடங்களுக்கு முன்னால் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்துவிட்டதை தொகுதி ஒதுக்கீட்டோடு அறிவித்துவிட்டது அ.தி.மு.க. 

அதன்படி லோக்சபா தேர்தலில் ஏழு இடங்கள் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு கைமாறாக இடைத்தேர்தல் நடைபெறும் 21 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தருவதாக பா.ம.க. வாக்குறுதி தந்துவிட்டதாம். இதில் எடப்பாடியார் செம்ம ஹேப்பி. மத்தியில் மற்றும் மாநிலத்தில் ஆளும் இரு பெரும் கட்சிகள் ஒரே தளத்தில் இருக்கும் கூட்டணியில் தங்களுக்கு கணிசமான தொகுதிகளுடன் இடம் கிடைத்திருப்பதில் அன்புமணிக்கு பெரும் சந்தோஷம். ‘வெற்றி வாகை சூடிடணும்யா!’ என்று குதூகழித்திருக்கிறார். மகனுக்காகத்தான் இந்த கூட்டணியை ஏற்றுக் கொண்டுள்ளதால் டாக்டரும் ஹேப்பியே. 

சந்தோஷம் பொங்கப் பொங்க பா.ம.க. மகிழ்ந்திருந்த சூழ்நிலையில்....காடுவெட்டி குருவின் மரண விவகாரம் தொட்டு வேல்முருகன் கிளப்பியிருக்கும் தகவல் அவர்களை ஒரு புறம் கடுமையாய் அப்செட் செய்துள்ளது! என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். பாட்டாளி மக்கள் கட்சியின் அச்சாணியான ‘வன்னியர் சங்கத்தின்’ ஆணி வேராக இருந்தவர் காடுவெட்டி குரு, இவரால்தான் அந்த கட்சிக்கு வன்னியர் சமுதாய இளைஞர்கள், நடுத்தர வயதினர் உள்ளிட்டவர்களின் பெரும் ஆதரவு பெருகியது. ராமதாஸ், அன்புமணி இருவரின் மெய்க்காப்பாளராகவும், கட்சியின் தளபதியாகவும் விளங்கிய குரு சில மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். 

இது பா.ம.க.வில் பெரும் பிளவுக்கு வழிவகுத்தது. அதாவது ’குரு நெடுநாட்களாக உடல் நலமில்லாமல் இருந்தாரு. ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் அவரோட நோயை குணப்படுத்துறதுல அக்கறை காட்டாமல், அலட்சியப்படுத்திட்டாங்க. இதனாலேயே முறையான சிகிச்சை இல்லாமல் குரு செத்துட்டார்.’ என்று குருவின் அம்மா, சகோதரிகள், மகன் உள்ளிட்டோர் பொங்கி எழுந்தனர். இந்த குரல்களை தைலாபுரம் விரும்பவில்லை. கூடவே குருவின் குடும்பத்தோடு நெருக்கத்தில் இருந்த பா.ம.க. நிர்வாகிகளையும் களையெடுத்தனர் அப்பா, மகன் இருவரும். 

இதில் பாதிப்படைந்தவர்கள், குருவின் மகன் கனலரசனை மையப்படுத்தி தனி அணியாக இயங்க துவங்கியுள்ளனர். இவர்களின் ஒரே நோக்கம் பா.ம.க.வை இனி அரசியலில் வளரவிடக்கூடாது! என்பதுதான். இவர்களின் கோபமும், சபதமும் நிச்சயம் இந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க.வுக்கு எதிராக இயங்கும். இது டோட்டலாக பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளில் அக்கட்சிக்கும், மீதி தொகுதிகளில் அவர்களின் கூட்டணி தலைவனான அ.தி.மு.க.வுக்கும் பெரும் குடைச்சலாக அமையுமென்பது கண்கூடு. 

சூழல் இப்படி இருக்கையில், ஒருகாலத்தில் பா.ம.க.வில் கோலோச்சி பின் வெளியேறி தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் இப்போது ஒரு பகீர் ஸ்டேட்மெண்டை தட்டியுள்ளார். அதில் ‘காடுவெட்டி குருவின் மரணம் தொடர்பாக நான் நிறைய தகவல்களை சேர்த்து வைத்துள்ளேன். கூடிய விரைவில் இந்த உண்மைகளை வெளியிடுவேன். அப்போது சிலரின் முகச்சாயம் வெளுக்கும்.’ என்று பெரும் புதிர்போட்டு ஏழரையை இழுத்துள்ளார்.

 

வன்னியர் வாக்கு வங்கியில் ஓரளவு ஆதரவை வைத்திருக்கும் இவரையும், காடுவெட்டி குருவின் அனுதாபிகளையும் இப்போது தி.மு.க. தங்களின் ஆதரவு வட்டாரத்தினுள் கொண்டு வர பெரும் முயற்சிகளை எடுத்துள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் உளவுத்துறையின் வழியே முதல்வர் எடப்பாடியாரின் கவனத்துக்கு உடனடியாக போயுள்ளது. தைலாபுரத்துக்கும் பாஸ் ஆகியுள்ளது. பா.ம.க.வுடனான கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே இப்படியான வில்லங்கங்கள் கொலவெறியாய் கிளம்புவதால் முதல்வர் ஏகத்துக்கும் அப்செட்டாம். குரு உச்சத்துலதான் போங்க!

click me!