விசிகவுடன் பகை இல்லை! ரஜினியுடன் கூட்டணி பேசவில்லை! திமுகவிற்கு சிக்னல் கொடுத்த மருத்துவர் அய்யா!?

By Selva KathirFirst Published Sep 14, 2020, 12:31 PM IST
Highlights

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் தங்களுக்கு எந்த பகையும் இல்லை என்று ராமதாஸ் பேசியிருப்பது திமுகவை உற்சாகப்படுத்தியுள்ளது.

வட மாவட்டங்களில் பலம் வாய்ந்த இரண்டு அரசியல் கட்சிகளாக இருப்பது பாமக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. துவக்கத்தில் இரண்டு கட்சிகளும் எலியும் பூனையுமாக இருந்தன. பிறகு ராமதாஸ் முயற்சியில் விசிகவும், பாமகவும் இணைந்து செயல்பட ஆரம்பித்தன. பிறகு மீண்டும் இரண்டு கட்சிகளும் எலியும் பூனையுமாகிவிட்டன. தற்போதைய சூழலில் திமுக கூட்டணியில் விசிகவும், அதிமுக கூட்டணியில் பாமகவும் உள்ளன.  சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தொடர உள்ளதாக விசிக அறிவித்துவிட்டது. ஆனால் பாமகவை பொறுத்தவரை அதிமுக கூட்டணியில் இருந்தாலும் அவர்கள் உறுதியான முடிவை அறிவிக்கவில்லை.

பாமகவை திமுக கூட்டணியில் சேர்க்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இரு கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்கள் அவ்வப்போது சந்தித்து கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆனால் பாமக இடம்பெறும் கூட்டணியில் தாங்கள் இடம்பெறப்போவதில்லை என்று விசிக ஏற்கனவே அறிவித்துள்ளது. எனவே பாமக கூட்டணிக்கு வந்தால் விசிக கூட்டணியில் நீடிக்குமா என்கிற கேள்வி எழுந்தது. மேலும் விசிக கூட்டணியில் இருக்ககூடாது என்று பாமக தரப்பிலும் திமுகவிடம் வலியுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதனால் திமுக – பாமக கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாமல் ஓடிக் கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். அதே போல் ரஜினி தரப்பில் இருந்து பாமகவுடன் பேசுவதாக சொல்கிறார்கள். ரஜினி கட்சி ஆரம்பிக்கும் போது வலுவான கூட்டணி அவசியம் என்று கருதுவதாக சொல்கிறார்கள். இதற்காக கமலின் மக்கள் நீதி மய்யம், விஜயகாந்தின் தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளோடு ரஜினிக்கு நெருக்கமானவர்கள் பல முறை பேச்சு நடத்தியதாக கூறுகிறார்கள். அதிலும் பாமகவோடு ரஜினி தரப்பில் சற்று அதிகம் பேசுவதாகவும் தகவல்கள் வெளியாகின. ராமதாசும் கூட ரஜினி கட்சி ஆரம்பித்தால் அவருடன் கூட்டணி அமைக்க தயாரான மனநிலையில் உள்ளதாகவே பேச்சுகள் அடிபட்டன. இந்த நிலையில் ராமதாஸ் தனியார் தொலைக்காட்சிஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடனான கருத்து வேறுபாடு குறித்து ராமதாஸ் விளக்கியுள்ளார். சில விஷங்களில் விசிகவின் செயல்பாடுகள் தங்களை காயப்படுத்தும் வகையில் இருப்பதாகவும் மேலும் திருமாவளவன் அக்கட்சியினர் செய்யும் தவறான செயல்களை தட்டிக்கேட்பதில்லை என்றும் இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுதானே ஒழிய தங்களுக்கு விசிகவுடன் பகை எதுவும் இல்லை என்று ராமதாஸ் அந்த பேட்டியில் கூறியுள்ளார். இதன் மூலம் விசிக இருக்கும் கூட்டணியில் இடம்பெறுவதில் தங்களுக்கு தயக்கம் இல்லை என்பதை ராமதாஸ் மறைமுகமாக உணர்த்தியுள்ளதாக கூறுகிறார்கள்.

இதே போல் ரஜினியுடன் கூட்டணி குறித்து பேசுகிறீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கும் இன்னும் இல்லை என்றே ராமதாஸ் பதில் அளித்துள்ளார். இதன் மூலம் திமுக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ராமதாஸ் சிக்னல் கொடுத்துள்ளார் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். விசிக கூட்டணியில் இருப்பதால் தயங்க வேண்டாம், ரஜினியுடன் இன்னும் நான் பேசவில்லை என்று வெளிப்படையாக கூறியிருப்பதால் திமுக தரப்பை பேச்சுவார்த்தைக்கு வருமாறு ராமதாஸ் மறைமுகமாக அழைத்திருப்பதாகவே சொல்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு படு தோல்வி அடைந்தது பாமக. சட்டமன்ற தேர்தலிலும் இப்படி ஒரு நிலை ஏற்படக்கூடாது என்பதற்காகவும் மைனாரிட்டி அரசு அமைந்தால் கையில் எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை பொறுத்து ஆட்சியில் பங்கு கேட்கலாம் என்கிற எண்ணத்துடன் திமுக கூட்டணியின் மீது ராமதாஸ் கண் வைத்திருக்கலாம் என்று கூறுகிறார்கள்.
 

click me!