வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000 நிதி.! வழிகாட்டும் கர்நாடகம்- வழங்குமா தமிழ்நாடு? ராமதாஸ்

By Ajmal Khan  |  First Published Jan 14, 2024, 2:09 PM IST

பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தோருக்கு ரூ.1,000, தேர்ச்சி பெற்றோருக்கு ரூ.2,000, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கும், பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கும் தலா ரூ.3,000, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.4,000, பட்டமேற்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.5,000 வீதம் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என ராமாதாஸ் வலியுறுத்தியுள்ளார். 
 


பட்டதாரிகளுக்கு உதவித்தொகை

கர்நாடகத்தில் பட்டப்படிப்பை முடித்து 6 மாதங்கள் வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை கர்நாடக அரசு தொடங்கியிருக்கிறது இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கருநாடக சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் அளிக்கப்பட்ட 5 முதன்மை வாக்குறுதிகளில் மகளிர் நலன் சார்ந்த நான்கு வாக்குறுதிகளை ஏற்கனவே நிறைவேற்றி விட்ட சித்தராமய்யா தலைமையிலான அரசு, இப்போது பட்டதாரி இளைஞர்களின் நலன் சார்ந்த ஐந்தாவது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது. படித்து பட்டம் பெற்று 6 மாதங்களாகியும் வேலை பெறாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 வீதமும், பட்டயப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு மாதம் ரூ.1,500 வீதமும் வழங்கும் திட்டம் தான் இதுவாகும். 

Tap to resize

Latest Videos

கர்நாடக அரசு திட்டம்-பாராட்டதக்கது

ஓர் இளைஞர் பட்டம் பெற்று 6 மாதங்களில் ஏதேனும் வேலைவாய்ப்போ, உயர்கல்வி பயிலும் வாய்ப்போ கிடைக்காதபோது  அவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும். இது படித்த இளைஞர்களின் எதிர்காலத்தை சிறப்பாக்கும் நோக்குடன் சரியான நேரத்தில், சரியான முறையில் செய்யப்படும் உதவியாகும். படித்து பட்டம் பெற்ற இளைஞர்கள் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு போட்டித்தேர்வுகளையும்,  குடிமைப்பணி தேர்வுகளையும் எழுதுவதில் ஆர்வம் காட்டுவார்கள். அதைப் புரிந்து கொண்டு, அவர்கள் போட்டித்தேர்வுகளை எழுதுவதற்காக செய்யும் செலவில் ஒரு குறிப்பிட்டத் தொகையை ஈடுகட்டும்  வகையில் பட்டம் பெற்றதிலிருந்து 6 மாதத்தில் தொடங்கி அடுத்த இரு ஆண்டுகளுக்கு இவ்வுதவியை கர்நாடக அரசு வழங்கவுள்ளது. கர்நாடக அரசின் இந்த தொலைநோக்குப் பார்வை பாராட்டத்தக்கது.

தமிழ்நாட்டிலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை இதே போல் மாற்றியமைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாடு அரசோ யாருக்கும் பயனற்ற வகையில், 17 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தையும், கர்நாடகத்தில் செயல்படுத்தப்படும் திட்டத்தையும் எந்த வகையிலும் ஒப்பிட முடியாது. தமிழக அரசின் திட்டம் பயனற்ற திட்டமாகும். கருநாடகத்தில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ.3000 வழங்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் மாதம் ரூ.600 மட்டுமே, அதாவது கருநாடகத்தில் வழங்கப்படுவதில் ஐந்தில் ஒரு பங்கு மட்டும் தான்  வழங்கப்படுகிறது. 

தமிழக அரசின் திட்டம் உதவாது

தமிழ்நாட்டில் பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கு எந்த உதவியும் வழங்கப்படுவதில்லை. மாறாக பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தவர்களுக்கு மாதம் ரூ.200, 12ஆம் வகுப்பு தேறியவர்களுக்கு  ரூ.400 வழங்கப்படுகிறது. தமிழக அரசு வழங்கும் தொகை பட்டதாரிகளுக்கு எவ்வகையிலும் உதவாது. கருநாடகத்தில் முதற்கட்டமாக நடப்பாண்டில் 70 ஆயிரம் பேருக்கு இந்த உதவித் தொகை வழங்கப் படுகிறது.  இது விரைவில் ஒரு லட்சமாக உயர்த்தப்படவுள்ளது. மொத்தம்  இரு ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்பதால், அடுத்த ஆண்டில் புதிதாக பட்டம் பெற்ற மேலும் ஒரு லட்சம்  பேர் இந்தத் திட்டத்தில் சேருவார்கள். அப்போது பயனாளிகளின் எண்ணிக்கை 2 லட்சமாக உயரும். ஆனால், தமிழ்நாட்டில் 17 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின்படி மொத்தமாகவே 55 ஆயிரம் பேருக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படுகிறது.

உதவித்தொகையை அதிகரித்திடுங்கள்

இது வேலைவாய்ப்பு அலுவலகங்களில்  பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கும் 70 லட்சம் பேரில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவு ஆகும். பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தோருக்கு ரூ.1,000, தேர்ச்சி பெற்றோருக்கு ரூ.2,000, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கும், பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கும் தலா ரூ.3,000, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.4,000, பட்டமேற்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.5,000 வீதம் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்; அதன்மூலம் படித்த இளைஞர்களின் வாழ்வில் தமிழக அரசு ஒளி விளக்கேற்ற வேண்டும் என வலியுறுத்துவதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

பொங்கல் திருநாள் மட்டுமல்ல எல்லா நாட்களும் மகிழ்ச்சியான நாளாக திராவிட மாடல் ஆட்சி- மு.க. ஸ்டாலின்

click me!