வன்னியர்களுக்கு கருணாநிதி எப்படியெல்லாம் துரோகம் செய்தார் தெரியுமா..? பட்டியல் போட்டு ஸ்டாலினுக்கு ராமதாஸ் பதிலடி..!

By Thiraviaraj RMFirst Published Oct 8, 2019, 12:24 PM IST
Highlights

தேர்தலின் போது திமுக கொண்டாடவும், தேர்தலுக்குப் பிறகு தூக்கி எறியவும் வன்னியர்கள் என்ன கறிவேப்பிலையா? என பாமக நிறுவனர் இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெயிட்டுள்ள அறிக்கையில், ’தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்படும், மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு மணிமண்டபமும் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட ஏராளமான வெற்று வாக்குறுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அள்ளி வீசியிருக்கிறார்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தோல்வியடைவது மட்டுமின்றி, வைப்புத் தொகை கூட வாங்க முடியாதோ என்ற அச்சம் தான் அவரை இந்த நிலைக்கு தள்ளியிருக்கிறது. மக்களவைத் தேர்தலில் நகைக்கடனை தள்ளுபடி செய்வோம் என்பது உள்ளிட்ட புரட்டான வாக்குறுதிகளை வழங்கி, ஏழை மக்களை ஏமாற்றி கடனாளிகள் ஆக்கிய ஸ்டாலின், இப்போது விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் வன்னியர்களின் வாக்குகளை சுரண்டும் நோக்குடன் பொய் வாக்குறுதிகளை வீசியுள்ளார்.

ஆனால் பாவம். அத்தைக்கு மீசை முளைத்தால் என்ன நடக்கும்? என்று கற்பனையாக எழுதப் பட்ட கட்டுரையைப் படித்தால் எத்தகைய உணர்வு ஏற்படுமோ, அதேபோன்ற உணர்வு தான் ஸ்டாலின் அவர்களின் அறிக்கையை படிக்கும் போதும் ஏற்படுகிறது. வேலூர் தொகுதி தேர்தலின் போதே மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டது என்பதைக் கூட உணராமல் கற்பனையில் மிதக்கிறார் மு.க.ஸ்டாலின்.

வன்னியர்கள் என்றாலே எட்டிக்காயாக கசக்கும் ஸ்டாலின் அவர்களுக்கு இப்போது வன்னியர்கள் வெல்லக்கட்டியாக இனிக்கிறார்கள் போலிருக்கிறது. வன்னியர்கள் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 20 சதவிகித இட ஒதுக்கீட்டை திமுக தான் வழங்கியதாகவும், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப் போவதாகவும் ஸ்டாலின் கூறியிருக்கிறார். 1989-ஆம் ஆண்டில் வன்னியர்களுக்கு திமுக அரசு இடஒதுக்கீட்டை எளிதாக தூக்கிக் கொடுத்துவிடவில்லை.

தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள வன்னியர்களுக்கு 17 சதவிகித தனி இடஒதுக்கீடு  வழங்க வேண்டும் என்று 13.11.1969 அன்று அமைக்கப்பட்ட சட்டநாதன் குழு அறிக்கையில் பரிந்துரை  செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்த பரிந்துரையை செயல்படுத்தாமல், மொத்த இடஒதுக்கீட்டின் அளவை 41 விழுக்காட்டிலிருந்து 49 சதவிகிதமாக உயர்த்தியதுடன் நிறுத்திக் கொண்டு வன்னியர்களுக்கு துரோகம் செய்தது கலைஞர் தலைமையிலான திமுக அரசு. அதன்பின் 1980-ஆம் ஆண்டில் வன்னியர் சங்கங்களை ஒருங்கிணைத்து 9 ஆண்டுகள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி, தொடர் சாலைமறியல் போராட்டத்தின் போது 21 சொந்தங்களின் இன்னுயிரை தியாகம் செய்து பெற்றது தான் 20 சதவிகித இட ஒதுக்கீடு.  

அப்போதும் அந்த இட ஒதுக்கீட்டை கலைஞர் மனமுவந்து தரவில்லை. வன்னியர்களுக்கு இன்னும் கூடுதலான இட ஒதுக்கீடு கிடைத்து விடக்கூடாது என்ற கெட்ட நோக்கத்திலும், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தருவதைத் தவிர வேறு வழியில்லை என்ற கட்டாயத்தின் பேரிலும் தான் இடஒதுக்கீட்டை கலைஞர் வழங்கினார். வன்னியர்களின் தொடர்சாலை மறியல் போராட்டத்திற்கு பிறகு 25.11.1987 அன்று என்னையும், பிற சமுதாயத் தலைவர்களையும் அழைத்துப் பேசிய அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க ஒப்புக்கொண்டார். ஆனால், அடுத்த ஒரு மாதத்திற்குள்ளாக அவர் மறைந்து விட்ட நிலையில், அடுத்து வந்த ஆளுனர் ஆட்சியில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்காக 12.12.1988 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

அடுத்த ஒரு மாதத்தில் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்தப்பட்டு, திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், ஆளுனர் ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணையின்படி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் வன்னியர்களுக்கு மட்டும் 20 சதவிகிதத்திற்கும் கூடுதலாக இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். அவ்வாறு கூடுதல் இட ஒதுக்கீடு கிடைப்பதைத் தடுப்பதற்காகத் தான் 1989 ஆம் ஆண்டில் கலைஞர் அவசரம், அவசரமாக இடஒதுக்கீடு வழங்கினார். இதுதொடர்பாக என்னை அழைத்துப் பேசிய கலைஞரிடம் வன்னியர்களுக்கு  20 சதவிகித தனி ஒதுக்கீடு வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதற்கு வாய்ப்பில்லை என்று கலைஞர்  கூறிய போது, இட ஒதுக்கீட்டை 6 தொகுப்புகளாக பிரித்து வழங்கலாம் என்று வலியுறுத்தினேன்.

ஆனால், அதற்கும் ஒப்புக்கொள்ளாத கலைஞர், ‘‘இடஒதுக்கீட்டில் கூட உங்களுடன் என்னையும் சேர்த்துக் கொள்ள மறுக்கிறீர்களே? வெறும் 10,000 பேர் மட்டுமே உள்ள எங்களின் இசை வேளாளர் சமூகத்தையும் இந்தப் பிரிவில் சேர்த்துக் கொள்ளுங்களேன்’’என்று கூறி வன்னியருக்கு மட்டும் கிடைக்க வேண்டிய 20 சதவிகித இட ஒதுக்கீட்டை தமது இசைவேளாளர் சமுதாயம் உள்ளிட்ட 108 சமூகங்கள் கொண்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு வழங்கி துரோகம் இழைத்தவர் கலைஞர். ஸ்டாலினின் சமூகத்திற்கு தான் வன்னியர்களின் போராட்டத்தால் இட ஒதுக்கீடு கிடைத்ததே தவிர, வன்னியர்களுக்கு திமுக  இட ஒதுக்கீடு பெற்றுத் தரவில்லை. இந்த சமூக நீதி வரலாறு எல்லாம் அப்போது வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்த, அப்போதைய இளைஞரணித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

1989-ஆம் ஆண்டு மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு ஏற்படுத்தப்பட்ட பிறகு தனி ஒதுக்கீடு கேட்டு பா.ம.க. போராடி வந்தது. 30 ஆண்டுகளாக அந்தப் போராட்டம் தொடருகிறது. அதன்பின் 12 ஆண்டுகள்  திமுக ஆட்சியில் இருந்தது. அப்போதெல்லாம் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க திமுகவுக்கு மனம் வரவில்லை. 69 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில் 2010-ஆம் ஆண்டு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்கலாம்  என்று ஆணையிட்டது. அதன்படி தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துமாறு 28.10.2010 அன்று அப்போதைய முதலமைச்சர் கலைஞரை 27 சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன்  சந்தித்து வலியுறுத்தினேன். ஆனால், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை அவர் நடத்தவில்லை.

காரணம், அத்தகைய கணக்கெடுப்பை நடத்தினால் வன்னியர்களுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டியிருக்கும் என்ற எண்ணம் தான். அதுமட்டுமின்றி, 30.07.2010 அன்று முரசொலியில் எழுதிய கடிதத்தில், வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று வெளிப்படையாகவே   அறிவித்தார். அப்படிப்பட்ட திமுக, இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தனி ஒதுக்கீடு வழங்குவோம் என்று கூறுவது ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுவதற்கு இணையானது தான்’’ என அவர் தெரிவித்துள்ளார். 
 

click me!