கடும் எதிர்ப்புகளை மீறி தமிழகத்திற்குள் நுழைந்தது ராமராஜ்ஜிய ரத யாத்திரை!! எதிர்த்து போராடியவர்கள் கைது

First Published Mar 20, 2018, 10:04 AM IST
Highlights
ram rajya ratha yatra entered into tamilnadu


விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை, தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள் மற்றும் முஸ்லீம் அமைப்புகளின் எதிர்ப்புகளையும் கடந்து தமிழகத்திற்குள் நுழைந்தது.

விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை அயோத்தியில் தொடங்கி 5 மாநிலங்களை கடந்து தமிழகத்திற்குள் நுழைந்துள்ளது. கேரளாவைக் கடந்து தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தின் கோட்டை வாசல் பகுதியில் நுழைந்துள்ளது. 

அயோத்தியில் தொடங்கி, தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் வரும் 25ம் தேதி நிறைவு பெறுகிறது. மதநல்லிணக்கத்தை காக்கும் வகையில் இந்த ரதயாத்திரையை அனுமதிக்க கூடாது என எஸ்டிபிஐ, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் ஆகிய அமைப்பினர் கோரிக்கை வைத்தனர்.

கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி மற்றும் அபுபக்கர் ஆகிய 4 எம்.எல்.ஏக்களும் நேற்று சட்டசபையில், ரத யாத்திரைக்கு தடை விதிக்க வலியுறுத்தி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர முயன்றனர். ஆனால், பேரவை தலைவர் தனபால் அனுமதி மறுத்ததால், அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்த ரதயாத்திரையால் சமூகம் சார்ந்த கலவரங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், அதற்கு தடை விதிக்க வேண்டும் என திமுக, விசிக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் முஸ்லீம் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனால், போராட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளதால், வரும் 23ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ரத யாத்திரை செல்லும் வழியெங்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பல தடைகளையும் மீறி நெல்லை மாவட்டம் கோட்டைவாசல் பகுதிக்குள் ரத யாத்திரை வந்துள்ளது.

செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர் வழியாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடைகின்றது. பின்னர் மதுரை வழியாக வரும் 25ம் தேதி ராமேஸ்வரத்தில் ரத யாத்திரை நிறைவுபெறுகிறது. 

ரதயாத்திரை தமிழகத்திற்குள் அதே வேளையில், செங்கோட்டையில் எஸ்டிபிஐ அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். 

click me!