ராஜ்யசபா எம்பி பதவி..! ஸ்டாலின் மருமகன் எடுத்த திடீர் முடிவு..!

By Selva KathirFirst Published Jun 7, 2019, 10:31 AM IST
Highlights

மாநிலங்களவைத் தேர்தலில் சபரீசன் ஒரு வேட்பாளராக அறிவிக்கப் பட வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சபரீசன் தற்போது எம்பி பதவி வேண்டாம் என்கிற முடிவில் இருப்பதாக கூறுகிறார்கள். மத்தியில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் பட்சத்தில் மத்திய அமைச்சராகும் கனவில் சபரீசன் இருந்துள்ளார். ஆனால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மத்தியில் பாஜக ஆட்சி தான் என்பது உறுதியாகிவிட்டது. இதனால் மாநிலங்களவை எம்பி ஆகி பெரிய அளவில் ஒன்றும் சாதிக்கப் போவதில்லை என்று சபரீசன் யோசிக்கிறார்.

ராஜ்யசபா எம்பி பதவி விவகாரத்தில் ஸ்டாலின் மருமகன் சபரீசன் திடீர் முடிவு எடுத்துள்ளார்.

தமிழகத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் 6 பேரின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து இந்த மாத இறுதியில் அந்த ஆறு பேரின் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. தற்போதுள்ள எம்எல்ஏக்களின் அடிப்படையில் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தலா 3 மாநிலங்களவை எம்பி பதவிகளைப் பெற முடியும். 

அந்த வகையில் திமுக சார்பில் ஒரு எம்பி பதவி மதிமுகவிற்கு வழங்கப்பட உள்ளது. எஞ்சிய 2 எம்பி பதவிகளை பிடிக்க போட்டா போட்டி நிலவுகிறது. முன்னதாக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த கனிமொழி மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு விட்டார். எனவே கனிமொழிக்கு பதிலாக ஸ்டாலின் மருமகன் சபரீசன் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

திமுகவைப் பொறுத்தவரை தற்போது டெல்லி விவகாரங்களை சபரீசன் நேரடியாக கவனித்து வருகிறார். விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் டெல்லி விவகாரங்களை கவனிக்க சபரீசன் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டு உள்ளது. டெல்லியில் உள்ள தொடர்புகளை எளிதாக அணுக அவருக்கு எம்பி பதவி கொடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் குடும்பத்திற்குள் நீண்ட நாட்களாகவே ஒரு கோரிக்கை உள்ளது.

 

 அந்த வகையில் ஜூன் மாதம் நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் சபரீசன் ஒரு வேட்பாளராக அறிவிக்கப் பட வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சபரீசன் தற்போது எம்பி பதவி வேண்டாம் என்கிற முடிவில் இருப்பதாக கூறுகிறார்கள். மத்தியில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் பட்சத்தில் மத்திய அமைச்சராகும் கனவில் சபரீசன் இருந்துள்ளார். ஆனால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மத்தியில் பாஜக ஆட்சி தான் என்பது உறுதியாகிவிட்டது. இதனால் மாநிலங்களவை எம்பி ஆகி பெரிய அளவில் ஒன்றும் சாதிக்கப் போவதில்லை என்று சபரீசன் யோசிக்கிறார். எனவே ராஜ்யசபா எம்பி பதவியை பெற அவர் ஆர்வம் காட்டவில்லை என்கிறார்கள். 

இதனால் ராஜ்யசபா எம்பி பதவிகள் இரண்டையும் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கி விடலாம் என்று சபரீசன் பரிந்துரைக்க உள்ளதாகவும் பேசுகிறார்கள். திமுக வழக்கறிஞர் பிரிவில் இருக்கும் கிரிராஜன் மற்றும் திமுகவின் ஆஸ்தான வழக்கறிஞராக இருந்து வரும் வில்சன் ஆகியோருக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்படலாம் என்கிறார்கள்.

click me!