7 பேர் விடுதலையைப் பற்றிப் பேச திமுகவுக்கு அருகதை கிடையாது !! எடப்பாடி அதிரடி பேச்சு !!

By Selvanayagam PFirst Published Jun 7, 2019, 8:39 AM IST
Highlights

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்ட வருவதாக தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,. இந்த பிரச்சினையில் தி.மு.க. கேள்வி கேட்பதற்கே தகுதி கிடையாது என ஆவேசமாக பேசினார்.

சேலத்தில்  புதிதாக கட்டப்பட்ட பாலத்தை திறந்து வைப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் சென்னையில் இருந்து கோவை சென்றார். அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, தமிழகத்தில் பருவமழை பொய்த்ததின் விளைவாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தேர்தலுக்கு முன்பாகவே ஆலோசனை கூட்டம் நடத்தி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் குறைந்த தொகுதிகளில் தான் அ.தி.மு.க. போட்டியிட்டது. அப்படியென்றால் வாக்குகள் குறையும் அல்லவா. எனவே அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிட்டால் அதிக வாக்குகள் கிடைக்கும். கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது போக குறைந்த எண்ணிக்கையிலான நாடாளுமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். எனவே அ.தி.மு.க.வுக்கு குறைவான வாக்குகள் கிடைத்தது என்பது சரியல்ல என தெரிவித்தார்..

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கர்நாடகத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் ஆனவுடன் முதல் வேலையாக காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டப்படும். காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும் என்று பேசினார். இதற்கு எதிர்க்கட்சி தலைவர் என்ன பதில் சொல்கிறார் என்று நான் கேட்கிறேன்.

அதுமட்டுமல்லாமல் எதிர்க்கட்சியினர் வெற்றி பெற்று எம்.பி.க்கள் ஆகியிருக்கிறார்கள். நாங்கள் வெற்றி பெற்றால் பாலாறும் தேனாறும் ஓடும் என்று கூறினார்கள். அவர்கள் இப்போது வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் நாடாளுமன்றத்தில் பேசி காவிரி தண்ணீர் பெற்றுத்தருவார்கள் என்று நினைக்கிறேன் என எடப்பாடி கூறினார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரை விடுதலை செய்யுமாறு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியிருக்கிறோம். இந்த பிரச்சினையில் தி.மு.க. கேள்வி கேட்பதற்கே தகுதி கிடையாது. கருணாநிதி முதலமைச்சராக  இருந்தபோது அமைச்சரவை கூட்டப்பட்டு அதில் நளினியை மட்டும் விடுதலை செய்யலாம் என்றும் மற்றவர்களை விடுதலை செய்ய தேவையில்லை என்று முடிவு எடுத்திருக்கிறார்கள்.

அப்போது ஒரு முடிவை எடுத்து விட்டு வெளியில் வந்து இப்போது விடுதலை செய்யவில்லை என்று கேட்கிறார்கள். விடுதலை செய்யக் கூடாது என்று அமைச்சரவையில் முடிவு எடுத்து கையெழுத்திட்ட பிறகு இப்போது கேள்வி கேட்பதற்கு தி.மு.க.விற்கு என்ன உரிமை உள்ளது.?  என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

click me!