3 மாதங்களில் ராஜ்யசபா எம்.பி. தேர்தல்.. புதுச்சேரியிலிருந்து எம்.பி. ஆவாரா மத்தியமைச்சர் எல்.முருகன்..?

By Asianet TamilFirst Published Jul 8, 2021, 9:08 AM IST
Highlights

மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் எல்.முருகன், புதுச்சேரியிலிருந்து மாநிலங்களவை உறுப்பினர் ஆவாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. 
 

மத்தியில் பிரதமர் மோடி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. 45 பேர் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்றனர். தமிழக பாஜக தலைவர் எல்.முருகனும் மத்திய இணையமைச்சராகப் பதவியேற்றார். அவருக்கு தகவல் தொழில்நுட்பம், கால்நடை, மீன்வளம், பால்வளம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டன. தற்போது எல்.முருகன் எம்.பி.யாக இல்லை. அமைச்சராகப் பதவியேற்ற நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் ஏதேனும் ஒரு அவையில் அவர் எம்.பி.யாக வேண்டும்.
தமிழகத்தில் தற்போது மூன்று மாநிலங்களவை எம்.பி. காலியிடங்கள் இருந்தாலும், அந்த மூன்று இடங்களையும் திமுகவே கைப்பற்றும் சூழல் உள்ளது. அதிமுக ஆதரவோடுகூட கைப்பற்றுவது கடினம். எனவே, எல்.முருகன் பாஜக ஆளும் ஏதேனும் ஒரு மாநிலத்திலிருந்து எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு பதவியேற்றுள்ளது. இங்கு 6 தொகுதிகளில் வென்ற பாஜகவுக்கு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 3 பேருடைய ஆதரவும் உள்ளது.
புதுச்சேரியிலிருந்து கடந்த 2015-ஆம் ஆண்டில் அதிமுகவைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்.ஆர். காங்கிரஸ் கட்சி உதவியுடன் மாநிலங்களவை எம்.பி.யானார். இவருடைய பதவிக்காலம் வரும் அக்டோபர் மாதம் 6-ஆம் தேதியோடு நிறைவடைகிறது. எனவே, புதுச்சேரியிலிருந்து என்.ஆர். காங்கிரஸ் - பாஜக உறுப்பினர்கள் ஆதரவுடன் எல்.முருகன் மாநிலங்களவை எம்.பி.யாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.    

click me!