அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என்ற அறிவிப்பு தமிழக நலனுக்கா இல்ல சொந்த நலனுக்கா.? ஓபிஎஸுக்கு சிபிஎம் கேள்வி!

By Asianet TamilFirst Published Jul 7, 2021, 9:38 PM IST
Highlights

அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருப்பது தமிழக நலன் காக்கவா? சொந்த நலன்களை தற்காத்துக் கொள்வதன் வெளிப்பாடா?” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். 
 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியடைய பாஜக கூட்டணிதான் காரணம் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில், “பாஜக மீதும் பிரதமர் நரேந்திர மோடி மீதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முழு நம்பிக்கை வைத்துள்ளது. தேசநலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் அஇஅதிமுக - பாஜக கூட்டணி தொடரும். இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.” என்று பதிவிட்டிருந்தார்.


இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பதிலடி கொடுத்திருக்கிறார். அவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக நலன் காக்கவா? சொந்த நலன்களை தற்காத்துக் கொள்வதன் வெளிப்பாடா? தமிழகத்திற்கு உரிய வரிப் பங்கீடு வழங்க மறுப்பது தொடங்கி கொரோனா தடுப்பூசி வரை வஞ்சகமே தனது குணமாகக் கொண்டு செயல்படுவதுதான் பாஜக ஆட்சி. காவிரி ஆற்றில் நமது உரிமைக்காக நடத்திய சட்டப் போராட்ட பலன்களை ஏமாற்றிப் பறிக்கும் வகையில், தமிழகத்திற்கு துரோகம் இழைத்து வருகின்றது பாஜக.
இந்திய அரசாங்கம் கொரோனா முதல் அலையை சரியாக கையாண்டிருந்தால், இரண்டாவது அலையே ஏற்பட்டிருக்காது, இத்தனை இழப்புகளை இந்தியா சந்தித்திருக்காது என்று ஆய்வுகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. பாஜகவுடன் அணி சேர்ந்ததுதான் அதிமுக தோல்விக்கு காரணம் என்று அதிமுகவினரே வெளிப்படையாக பேசிவருகிறார்கள். ஆனால்,  அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தங்கள் ‘கூட்டணி’ தொடரும் என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இந்த அறிக்கை தமிழக நலன் காக்கவா? சொந்த நலன்களை தற்காத்துக் கொள்வதன் வெளிப்பாடா?” என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

click me!