சி.வி.சண்முகம் பற்றவைத்த நெருப்பு... அதிமுக-பாஜக கூட்டணி தொடர்வதாக பரபர அறிக்கை வெளியிட்ட ஓபிஎஸ்-இபிஎஸ்..!

By Asianet TamilFirst Published Jul 7, 2021, 9:08 PM IST
Highlights

அதிமுக தலைமையில் 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு அமைக்கப்பட்ட கூட்டணி தொடர்கிறது என்பதிலும்; நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாய் இருந்து, தமிழ் நாட்டின் உயர்வுக்கென உழைப்போம் என்பதிலும், யாருக்கும், எப்போதும், எவ்வித ஐயமும் எழத் தேவையில்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
 

இதுதொடர்பாக ஓபிஎஸ்- ஈபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக, அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைக்கப்பட்டது. அதிமுகவின் மக்கள் தொண்டில் தங்களை இணைத்துக்கொள்ள ஆர்வம் கொண்ட பல்வேறு அமைப்புகளும், தோழமை இயக்கங்களும் அதிமுகவின் தலைமையில் அமைந்த கூட்டணிக்கு ஆதரவு அளித்தன. தொடர்ந்து 10 ஆண்டுகள் தமிழ் நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் இருந்து அதிமுக தமிழ் நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழக மக்களின் எதிர்காலம் சிறக்கவும் எண்ணற்ற பணிகளை ஆற்றியது.
இந்தப் பணிகளுக்கெல்லாம் பாராட்டு தெரிவிப்பதுபோல, தமிழ்நாட்டு வாக்காளர்கள் அளித்த பேராதரவு காரணமாக 75 சட்டப்பேரவை உறுப்பினர்கள் அதிமுக கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களாக இன்று சட்டப்பேரவையில் இடம்பெற்றிருக்கின்றனர். வெறும் 3 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில்தானே அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது. அதிமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில், மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் நாம் ஆட்சியை இழந்திருந்தாலும், மக்களின் பேரன்பு அதிமுகவுக்கு தொடர்கிறது.
தேர்தல் முடிவுகள் சற்றே தொய்வையும், மனச் சோர்வையும் ஏற்படுத்தி இருந்தாலும், கொண்ட கொள்கையின் காரணமாகவும், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் மீது நாம் கொண்ட விசுவாசம் காரணமாகவும், கட்சித் தோழர்களின் பொது வாழ்வு என்னும் புனிதப் பயணம் வீருநடை போடுகிறது. இப்பொழுது நாம் ஆற்ற வேண்டிய பணிகள் நம் முன் அணிவகுத்து நிற்கின்றன. அரசியல் வாழ்வு என்பதே இடைநிற்றல் இல்லாத லட்சியப் பயணம்தானே! இலக்கினை அடையும் வரை வீரனுக்கு ஏது ஓய்வும், சோர்வும்! நம் இதயத்தின் தசையெல்லாம் எம்ஜிஆரின் அரசியல் பாடம் மட்டுமே. நம் கண்முன் தெரிவதெல்லாம் ஜெயலலிதாவின் பூமுகம் தான்.
நம் இலக்கு ஜெயலலிதாவின் பொற்கால அரசை மீண்டும் அமைப்பதும், எதிரிகளால் இருள் சூழ்ந்திருக்கும் தமிழ்நாட்டை ஒளிமயமான பொன்னுலகிற்கு இட்டுச் செல்வதாக மட்டுமே இருக்கிறது. வேறு எந்த சிந்தனையும் நம் மனதில் ஏற்படத் தேவையில்லை. அதிமுக தலைமையில் 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு அமைக்கப்பட்ட கூட்டணி தொடர்கிறது என்பதிலும்; நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாய் இருந்து, தமிழ் நாட்டின் உயர்வுக்கென உழைப்போம் என்பதிலும், யாருக்கும், எப்போதும், எவ்வித ஐயமும் எழத் தேவையில்லை என்பதை மீண்டும் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக தோல்விக்கு பாஜகவுடனான கூட்டணிதான் காரணம் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஓபிஎஸ்-இபிஎஸ் இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
 

click me!