மூன்றாவது முறையாக எம்.பி.ஆனார் ராஜிவ் சந்திரசேகர்… கர்நாடக பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி !!

First Published Mar 23, 2018, 10:38 PM IST
Highlights
rajiv chandra sekar win third time in karnataka


இன்று நடைபெற்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் இருந்து பாஜக சார்பில் போட்டியிட்ட ராஜிவ் சந்திர சேகர் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், கர்நாடகா  உட்பட 10 மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்கு 58 எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 33 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில்  மீதமுள்ள 25 இடங்களுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.

மத்திய அமைச்சர்கள்  ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் உள்பட 33 பேர் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதி உள்ள 25 இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது,  இதில் 31 பேர் போட்டியிட்டனர்.  இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை  நடைபெற்றது.

உத்தரபிரதேசத்தில் 10 இடங்களுக்கு மத்திய அமைச்சர்  அருண் ஜெட்லி உள்பட 11 பேர் போட்டியிட்டனர். மேற்கு வங்காளத்தில் 5 இடங்களுக்கு 6 பேரும், கர்நாடகாவில் 4 இடங்களுக்கு 5 பேரும், தெலுங்கானாவில் 3 இடங்களுக்கு 4 பேரும், ஜார்கண்டில் 2 இடங்களுக்கு 3 பேரும், சத்தீஸ்கரில் ஒரு இடத்துக்கு 2 பேரும் போட்டியிட்டனர்.

இந்நிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரசைச் சேர்ந்த 4 பேரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அபிஷேக் சிங்வியும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் ஜனதா தள் சரத் யாதவ் அணியைச் சேர்ந்த வீரேந்திர குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கானாவில் தெலுங்கான ராஷ்ட்ரிய சமீதி கட்சியைச் சேர்ந்த 3 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

கர்நாடகாவில் உள்ள 4 இடங்களுக்கு 5 பேர் போட்டியிட்ட நிலையில், பாஜக சார்பில் போட்டியிட்ட ராஜிவ் சந்திரசேகர் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஹனுமந்தையா, செய்யது நசீர், ஜி.சி.சந்திரசேகர் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்.

பாஜக சார்பில் போட்டியிட்டு மூன்றாவது முறையாக பெற்றி பெற்ற ராஜிவ் சந்திரசேகர் செய்தியாளர்களிடம் பேசினார்.  அப்போது தனக்கு வாக்களித்த 50 பாஜக எம்எல்ஏக்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் தமது வெற்றியை சாதகமாக்கிய பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

பெங்களூரு நகரத்தின் வளர்ச்சியையும் கர்நாடக மாநிலம் மற்றும் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு  உறுதுணையாக இருப்பேன் என்று ராஜிவ் சந்திரசேகர் உறுதியுடன் தெரிவித்தார்.

click me!