
மக்களிடையே பிரித்தாளும் கொள்கையை வெற்றிகரமாக செய்வதில் அரசியலை அடித்துக் கொள்ள வேறு சாதனம் ஏதுமில்லை. ஒரு குடும்பத்தில் கணவன் ஆளுங்கட்சியை ஆதரிக்க, மனைவியோ எதிர்கட்சியின் ரசிகையாக இருப்பதும் பிள்ளைகள் திசைக்கொரு கட்சியை போற்றுவதும் நம் தேசத்தில் வழக்கம்தான்.
இந்நிலையில் ஒரு கட்சியின் நிர்வாக தலைமைக்குள்ளேயே, சக அரசிய பற்றிய இரண்டு முரண்பாடான கருத்துக்களை உருவாக்க முடியுமென்றால் அதுவும் அரசியலாலேதான் சாத்தியம். ரஜினி அரசியலுக்கு வருவதை விடுதலை சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் ஆதரிக்க, அதன் பொதுச்செயலாளர் ரவிக்குமாரோ வன்மையாக எதிர்க்கிறார்.
இந்நிலையில், பி.ஜே.பி.க்கு தமிழகத்தில் களம் அமைத்துக் கொடுக்கத்தான் ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்று அடித்துப் பேசும் ரவி, ‘அந்த விஷயம் மட்டும் கைகூடினால் ரஜினியை அரசியலுக்கு வர வேண்டாமென்று பி.ஜே.பி. சொல்லிவிடும்.’ என்கிறார்.
அது எந்த விஷயம்? என அவரே விளக்குகிறார்...
“ஆர்.கே.நகரில் பெற்ற தோல்வி பி.ஜே.பி.யின் தலைமையை அதிர வைத்திருக்கிறது. நேரடியாக களமிறங்கி தமிழகத்தில் ஒரு கவுன்சிலர் பதவியை கூட பெறமுடியாது என அறிந்து வைத்துள்ளனர். அதனாலே ஒரு பெரிய சக்தியை தங்களின் துணையாக எதிர்பார்க்கின்றனர்.
இப்போதும் கூட தி.மு.க. ஒப்புக் கொண்டால் அவர்களுடன் ஒட்டிக் கொள்ள பி.ஜே.பி. தயாராக இருக்கிறது. பிரதமர் மோடி, கோபாலபுரம் சென்று கருணாநிதியை நலம் விசாரித்ததன் பின்புலமெல்லாம் இதுதான். கூட்டணிக்கு தி.மு.க. தயாரில்லை எனும் நிலையில்தான் ரஜினி எனும் களனை கொண்டு அதன் வழியே தங்களை நிரப்பிக் கொள்ள முனைகிறது பி.ஜே.பி.
இப்போதும் கூட ஒரு விஷயத்தை உறுதியாய் சொல்லிவிட முடியும். அதாவது ‘பி.ஜே.பி. கூட்டணிக்கு நாங்கள் தயார்.’ என தி.மு.க. கூறிவிட்டால் போதும், ரஜினியை கட்சி ஆரம்பிக்க வேண்டாம் என்று பி.ஜே.பி. சொல்லிவிடும்.” என்றிருக்கிறார்.
இது எப்டியிருக்கு!