
புதிய கட்சி தொடங்கும் ரஜினிகாந்த், திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற திட்டமிட்டுள்ளதால், அதற்கான ஏற்பாடுகளையும் செய்யச் சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பல வருடங்களாக அரசியலுக்கு வருவதாக போக்கு காட்டி வந்த ரஜினிகாந்த், தற்போது தான் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்தார். வரும் சட்டமன்ற தேர்தலில் புதிய கட்சி தொடங்கி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக அறிவித்தார். ஆன்மீகம் கலந்த அரசியலே தனது நிலைப்பாடாக இருக்கும் எனவும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
இந்நிலையில் புதிய கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், இன்று மாலை திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
“என்னதான் நாம கட்சி ஆரம்பிச்சாலும் அரசியல்ல கலைஞர் தானே நமக்கு குரு. அவரைப் பார்த்து ஆசிர்வாதம் வாங்குறதுதானே முறையாக இருக்கும்” என தனக்கு நெருக்கமானவர்களிடம் சொன்ன ரஜினிகாந்த், இந்த சந்திப்பின் போது, புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கவும், உடல் நலம் குறித்து விசாரிக்க உள்ளதாக தெரிகிறது. இன்று கோபாலபுரம் வீட்டுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதால், அதற்கான ஏற்பாடுகளையும் செய்யச் சொல்லி இருக்கிறாராம். இந்த தகவல் திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கும் சொல்லப்பட்டுள்ளதாம்.
மேலும் இந்த சந்திப்பின்போது ரஜினிகாந்துடன் அவரது ரசிகர் மன்ற நிர்வாகியும் திமுக தரப்பில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் இருப்பர் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், இச்சந்திப்பு குறித்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.