
உள்நோக்கத்துடன் தங்களது குடும்பத்தை தாக்கி துக்ளக் பத்திரிக்கையில் எழுதி வரும் ஆடிட்டர் குருமூர்த்தியை நேரில் சந்தித்து நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லத் தேவையில்லை என்று நறுக்கு தெறித்தார்போல் கேள்வி கேட்டேன் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தனியார்தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த போது நீங்கள் பாஜகவின் ஆடிட்டர் குருமூர்த்தியை ரகசியமாக சந்தித்தீர்களா ? என நெறியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த டி.டி.வி.தினகரன், நான் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் குருமூர்த்தியை சந்தித்தது உண்மைதான் என கூறினார். ஆனால் ரகசியமாக எல்லாம் சந்திக்கவில்லை என்றார்.
சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்ட்டபோது அவரை சந்திக்க ஸ்டெர்லிங் நிறுவன தலைவர் சிவசங்கரன் வந்திருந்தார். அப்போது துக்ளக் குருமூர்த்தி எங்களது குடும்பத்தைப் பற்றி தவறாக எழுதி வருகிறார் என்று அவரிடம் சசிகலா தெரிவித்தார்.
அப்போது அவர், குருமூர்த்தி தனது நண்பர்தான் என்றும், நான் அவரை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன் என்றும் கூறினார். அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் தேதி லீலா பேலஸ் ஹோட்டலில் குருமூர்த்தியை சந்திதாக தெரிவித்தார்.
அவரிடம் பேசும்போது சோ இருக்கும் வரை துக்ளப் பத்திரிகையில் நேர்மையாகத்தான் எழுதிக் கொண்டிருந்தார்கள், ஆனால் இப்போது எங்கள் குடும்பத்தை தாக்கி எழுதி வருகிறீர்களே என தான் கேட்டதாக கூறினார்.
அதற்கு பதிலளித்த குருமூர்த்தி உங்கள் குடும்பம் அப்படி செய்கிறது, இப்படி செய்கிறது என கூறினார். இதைத் தொடர்ந்த பேசிய நான் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நாங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் , அது உங்கள் வேலை அல்ல என்று கோபமாக சொல்லிவிட்டு வந்துவிட்டேன் என டி.டி.வி,தினகரன் அந்த நேர்காணலில் தெரிவித்தார்.