அஜித்குமார் vs ரஜினிகாந்த்: தல பிறந்தநாளில் தலைவனின் சிங்கிள் டிராக்! எந்த சிங்கம் சீறும், எந்த சிங்கம் சிணுங்கும்?

First Published May 1, 2018, 1:33 PM IST
Highlights
Rajinikanth kaala single track release ajith birthday


இந்த செய்தியின் தலைப்பை வாசிப்பவர்கள் சற்றே ஜெர்க் ஆகலாம். அதென்ன அஜித்குமார் vs ரஜினிகாந்த்! என்று அஜித் பெயரை முதலில் போட்டுள்ளார்கள்? என்று.  காரணம் இருக்குதும்மா கண்ணு!...

சினிமா நாயகனான கொண்டாடிய தன்னை இன்று அரசியல் பல்லக்கிலும் தூக்கி சுமக்க ரசிகர்கள் தயாராய் இருப்பதில் ரஜினிக்கு பெருமை இருக்கலாம். நெடுநாள் கழித்து தன் வாழ்வில் இப்படியொரு சூழ்நிலை வரலாம் என்பதாலோ என்னவோ தன் ரசிகர் நற்பணி மன்றத்தை காலங்காலமாக பொத்தி வைத்து கடத்தி வந்திருக்கிறார் ரஜினி.

முதுமை மூர்க்கமாகிவிட்ட நிலையில் தான் இனி அரசியலுக்கு வரமாட்டேன் என்று நினைத்து ரசிகர்கள்  சிதறிவிடுவார்கள்! என்று பயந்த பொழுதிலும், தன் ரசிக மன்றங்கள் கட்டுக்கோப்பின்றி கலைந்துவிட்டால் தனது புதிய படத்துக்கான வசூல் சிக்கலாகிவிடும்! என்கிற நினைப்பிலும் அடிக்கடி அரசியல் மற்றும் சினிமா பஞ்ச்களை பொதுவெளியில் பேசிப்பேசி, ரசிகர்களை தன் கைக்குள்ளேயே வைத்திருந்தார் ரஜினி. அதன் விளைவே இன்று அவரது அரசியல் எண்ட்ரிக்கு இவ்வளவு பரபரப்பு. சிம்பிளாக சொல்வதானால் ரசிகர் மன்றங்கள் இல்லையென்றால் ரஜினி இல்லவே இல்லை.

ஆனால் ரஜினிக்கு எவ்வளவோ பிந்தைய நாளில் சினிமாவுக்கு வந்தவர்தான் அஜித்குமார். ரஜினி போல் மாஸ் மரண ஹிட்டுகளையோ, பெரும் மசாலா படங்களை மட்டுமோ கொடுத்ததில்லை. ஆயிரத்தெட்டு ஆபரேஷன்கள், தோல்வியால் இடைவெளிகள் என்று எவ்வளவோ இறக்கங்களை சினி இண்டஸ்ட்ரியில் சந்தித்தவர்தான் அஜித். ஆனால் அவரது புதிய பட அறிவிப்பு வருகிறதென்றால் வாரிச் சுருட்டிக் கொண்டு எழும் தமிழகம்.

 அஜித்குமாருக்கு மிக சரியான போட்டியாளர்தான் விஜய். ஆனால் விஜய் எந்த காலத்திலும் தன் சினிமாக்களுக்கு நடுவில் இடைவெளி விட்டதே கிடையாது. எப்போதும் ஷூட்டில்தான் இருப்பார். அவரது செல்வாக்கும் ரசிகர் மன்றங்களை கைக்குள் வைத்திருப்பதில்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது.
ஆனால் அஜித்தோ என்றுமே அடுத்த படம் என்ன? என்று கவலைப்பட்டது கிடையாது. வெற்றியோ, தோல்வியோ! டப்பிங் முடித்ததும் குடும்பத்தோடு ஐக்கியமாகிவிடுவார். ஆனால் அதையும் தாண்டி அவரது புதுப்பட அறிவிப்புகள் வந்தால் வகை தொகையில்லாமல்! ஆண் பெண் பேதமில்லாமல் கொண்டாடுவார்கள் தமிழர்கள். அதுதான் தல!யின் தனிப்பெரும் செல்வாக்கு.

இதுமட்டுமா இவற்றுக்கெல்லாம் மேலாக அஜித்துக்கு என்று ஆகப்பெரிய கெளரவம் ஒன்று இருக்கிறது. அதுதான்...இந்தியாவில் எந்த மாஸ் ஹீரோவும் செய்ய  நடுங்கும் காரியமான ‘ரசிகர் மன்ற கலைப்பு’. இதை எப்போதோ செய்துவிட்டார் அஜித். ’நான் நடிகன். என் படம் பிடிச்சிருந்தா வந்து பாருங்க! என் படத்துக்கு வர்றவங்க எல்லாரும் என் ரசிகர்கள் தான். என் படம் பிடிக்கலைன்னா வர வேண்டாம்.’ என்று அதிரடி லாஜிக் கொடுத்தார் அந்த கலைப்பு நடவடிக்கைக்கு.

மன்றம் கலைந்த பின் அஜித்தின் மாஸும்! கலைந்துவிடுமென கனவு கண்டனர் அவரது தொழில் முறை எதிரிகள். ஆனால் அதன் பின் தான் அஜித்துக்கு வெறி ரசிக, ரசிகைகள் அதிகமானார்கள். ‘தமிழ்நாடு, கேரளா, ஆந்திரான்னு எங்க தல!க்கு எல்லா மக்களுமே ரசிகர்கள்தான். இதுல தனியா மன்றம்-ன்னு சொல்லி சிலரை மட்டுமே அடையாளம் காட்ட வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை.’ என்று அஜித்தை இமய உயரத்துக்கு தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றனர் அவரது ரசிகர்கள், ரசிகைகள்.
இந்த அன்பு, அஜித்தே எதிர்பார்க்காததுதான்.

ரசிகர் மன்றமே இல்லாமல் அஜித்துக்கு லட்சம் லட்சமாய் வெறி ரசிகர்கள் உருவாகிக் கொண்டே இருப்பது நார்மல் மாஸ் ஹீரோக்களை மண்டை காய வைத்திருப்பதில் மாற்றுக் கருத்தில்லை. இப்போது சொல்லுங்கள் அஜித் கெத்துதானே! ரஜினிக்கு முன்பாக அஜித் பெயரை போட்டதில் அர்த்தம் இருக்குதுதானே!?
சரி விஷயத்துக்கு வருவோம்! அது என்ன அஜித்துக்கும், ரஜினிக்கும் போட்டி? என்கிறீர்களா!...
இன்று மே 1 - தல யின் பிறந்த நாள். ரசிக பேதம், வயது வித்தியாசமில்லாமல் ஆளாளுக்கு அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லி அவரை கொண்டாடித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இணையதளமெங்கும் அஜித் மயமாகி இருக்கும் சூழலில் இன்று மாலையில் ரஜினியின் காலா படத்தின் சிங்கிள் டிராக் வெளியாகிறது. இதை அப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் உறுதி செய்திருக்கிறார் நேற்று. அஜித்தின் கொடி இன்று உச்சத்தில் பறக்கும் நிலையில், ரஜினி படத்தின் சிங்கிள் டிராக்கை வெளியிடுவதில் பெரிய உள் அர்த்தமிருக்கிறது என்கிறார்கள் சினிமா விமர்சகர்கள்.

அதாவது அரசியலுக்கு வர முடிவெடுத்துவிட்ட ரஜினி மீது ஆயிரத்தெட்டு விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால் ஓட்டு போடுவதை தவிர வேறெந்த நிலையிலும் அரசியலை பற்றி பேசாத அஜித்தை ‘தல வாங்க! நீங்க வந்தால் நிச்சயம் ஆதரிப்போம்.’ என்று கோடி ஜனங்கள் வேண்டி விரும்பி அழைக்கின்றன. காரணம், அஜித் சத்தமில்லாமல் செய்து கொண்டிருக்கும் மா பெரிய சேவைகளே.இந்த விஷயம்தான் ரஜினியின் டீமுக்கு ஈகோவை உருவாக்கி விட்டது. அதனால்தான் அஜித்தை விட ரஜினியே உசத்தி! என்பதை காட்டுவதற்காக இன்று மாலை சிங்கிள் டிராக்கை வெளியிடுகிறார்கள். இதன் மூலம் அஜித் பிறந்தநாள் பரபரப்பை திசைமாற்றி ரஜினி பற்றிய பேச்சை கிளப்புவதே தனுஷின் திட்டமாம்.

ஆனால் இதற்கு பதிலடி தரும் தல!யின் ரசிகர்களோ ‘நாங்க நள்ளிரவு  12 மணியிலிருந்தே தல யின் பிறந்தநாளை தாறுமாறா கொண்டாடிக்கிட்டிருக்கோம். தைரியமிருந்தால் இன்னைக்கு காலையிலேயே ரஜினியின் காலா படத்தின் சிங்கிள் டிராக்கை வெளியிட வேண்டிதானே? அதை ஏன் இன்றைய நாள் கொண்டாட்டங்கள் எல்லாமே முடியிற இரவு 7 மணிக்கு வெளியிடணும்?

ஆக அஜித்திடம் மல்லுக்கு நிற்க முடியாது, தோத்துடுவோம் அப்படிங்கிற பயம்தானே இரவு நேரத்தில் சிங்கிளை வெளியிட வெச்சிருக்குது.
இந்த பயம் ஒன்றே தல அஜித்தின் வெற்றியை காட்டுகிறது” என்கிறார்கள்.ஆனால் ரஜினியின் ரசிகர்களோ ‘எங்க தலைவர் காலையிலேயே வந்தால் உங்க தல யின் பிறந்தநாள் அடிபட்டு போயிடும். அய்யோ பாவமுன்னு டைம் கொடுத்திருக்கோம்.” என்கிறார்கள்.

ஆக அஜித், ரஜினி எனும் இரண்டு சிங்கங்களில் எந்த சிங்கம் சிலிர்க்கப்போகிறது? எந்த சிங்கம் சிணுங்கப் போகிறது? என கவனிப்போம்.

click me!