
ரஜினிகாந்தை தமிழர்களின் உணர்ச்சியை திசை திருப்பி மூளையை மழுங்கடிக்க செய்யும் ஒரு போதை வஸ்துவாக டெல்லி லாபி பயன்படுத்துகிறது என்று விளாசல் விமர்சனம் வைக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
பிரச்னை இதுதான்...நீட் தேர்வு எழுதும் தமிழகத்தை சேர்ந்த பிள்ளைகளில் பல நூறு பேருக்கு கேரளா, ராஜஸ்தான் என்று வேற்று மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து தமிழகம் முழுக்கவே நேற்று காலையிலிருந்தே கண்டனங்கள் வெடிக்க துவங்கின. இந்த பிள்ளைகளின் சிரமத்திற்காக உச்ச்ச்....கொட்டும் அதே நேரத்தில் உதவிக்கரங்களும் வந்து குவிந்தன.
கேரள, ராஜஸ்தான் வாழ் தமிழர்கள் ‘வரும் பிள்ளைகளை பத்திரமாய் பார்த்துக் கொள்ள நாங்கள் ரெடி’ என்றனர். தமிழகத்தை சேர்ந்த வணிகர்கள், நடிகர்கள், சாதாரண குடிமக்கள் என பலர் வேன், உணவு, விமான செலவு என்று பல வகையான உதவிகளை செய்ய மனப்பூர்வமாக முன் வந்தனர். ‘மத்திய மாநில அரசுகள் இந்த குழந்தைகளை பரிதவிக்க விட்ட நிலையில் மக்களே முன்வந்து தங்களின் பிரச்னைகளை தங்களுக்குள் தீர்த்துக் கொள்வது அழகு.
நமக்கு நாமே கடவுளாக இருக்கையில் ஏன் நமக்கு ஆட்சி, அதிகாரங்கள், அரசுகள் எல்லாம்?’ என்று கேள்விகள் எழுந்தன. மோடி தலைமையிலான மத்திய அரசையும், அது ஆட்டுவிக்கும் மாநில அரசையும் கிழி கிழியென கிழித்து விமர்சனங்கள் வெடித்துக் கொண்டிருந்தன.
இந்த நிலையில்தான் திடீரென சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. அது வேறொன்றுமில்லை, நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய படங்கள்தான். அதுவரையில் நீட் நீட் நீட்! என்று கொதித்துக் கொண்டிருந்த தமிழகத்தின் கணிசமான இளைஞர்கள் ‘டேய் ரஜினி வீட்டை பாரேன்! அவரு மனைவி அவருக்கு ஆரத்தி எடுக்குறதை பாரேன்!’ என்று தடம் மாறினர். ரஜினி பற்றிய பேச்சு நீள நீள நீட் விவகாரத்தின் உணர்ச்சி நீர்த்துக் கொண்டே போனது.
இப்படி ரஜினியின் படத்தை நெட்டில் உலவ விட்டு தமிழர்களின் உணர்ச்சிகளை திசைமாற்றி சாகடித்தது டெல்லி லாபிதான் என்று கொதிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இது பற்றி பேசும் அவர்கள்...
“தமிழன் எப்போதுமே உணர்ச்சி வசப்பட்டவன் தான். அது கோபம் மட்டுமில்லை காதல், கவர்ச்சி எல்லாவற்றிலும் உணர்வுப்பூர்வமாக இருப்பான். இதைத்தான் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது டெல்லி லாபி.
நேற்று நீட் தேர்வு மைய விவகாரங்கள் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த போது, அதை திசை திருப்புவதற்காக வேண்டுமென்றே ரஜினியின் அமெரிக்கா ரிட்டர்ன் படங்களை வைரலாக்கியது ஒரு ஐ.டி. டீம்.
ரஜினி என்ன அமெரிக்காவில் போய் சாகசம் செய்துவிட்டா வந்தார். அவர் ஒரு நோயாளி! தமிழக முதல்வராவேன் என்று கனவில் வாழ்ந்து சபதம் செய்யும் அவர், தன் நோய்க்காக தமிழக மற்றும் இந்திய மருத்துவத்தை நம்பாமல் அமெரிக்கா போய்விட்டு திரும்பியிருக்கிறார். இதை வேண்டுமென்றே வாட்ஸ் அப்பில் உலவவிட்டு வைரலாக்கினார்கள். நம் மக்களும் ‘ஆ ரஜினி, ஆஹா ரஜினி’ என்று அந்த போட்டோவை ஷேர் செய்வதில் நீட்டை மறந்தார்கள்.
ரஜினியின் வீட்டுக்குள் அவரது மனைவி அவருக்கு ஆரத்தி எடுத்த போட்டோ வரை வேண்டுமென்றே நேற்று பரப்பி விட்டார்கள். இதைப் பார்க்கும் மக்கள் ‘ரஜினி வீட்டு வாசலை பாரேன், கால் மிதியை பாரேன், லதா போட்டிருக்கிற மெட்டியை பாரேன். பாருடா நம்ம மாதிரி சாதாரண செருப்புதான் அவங்க வீட்டுக்குள்ளே கெடக்குது.’ என்று அதிசயித்து அதிசயித்து நீட் குழந்தைகளின் அவலத்தை மறந்தார்கள்.
இதை வேண்டுமென்றே செய்து சக்ஸஸ் செய்தது டெல்லி பி.ஜே.பி. லாபிதான். அதற்கு ஒத்து ஊதியது தமிழக அரசு. ரஜினி ரிட்டர்ன் ஆன போட்டோக்களை மட்டும் போடாமல் ‘தமிழ்நாடு திரும்பிய ரஜினி விரைவில் அரசியலில் குதிக்கும் முடிவை அறிவிக்கிறார்’ என்று செய்தியும் கிளப்பிவிட்டு நீட்டை மலுங்கடித்தனர்.
ஏற்கனவே காவிரி பிரச்னை உச்சத்தில் இருந்தபோது நிர்மலா தேவியின் செக்ஸ் பேச்சை கிளப்பிவிட்டு அந்த புயலில் காவிரியை தொலைத்தது போல், ரஜினி எனும் போதை வஸ்துவை பயன்படுத்தி நீட் உத்வேகத்தை தொலைக்க வைத்தனர்.” என்கிறார்கள்.
நிஜம்தான்!