சூர்யா பேசியதை வரவேற்கிறேன்... எதிர்காலத்தில் அவருடைய தொண்டு மக்களுக்கு தேவை... நடிகர் ரஜினி அதிரடி பேச்சு!

By Asianet TamilFirst Published Jul 22, 2019, 6:22 AM IST
Highlights

புதிய கல்வி கொள்கை குறித்து சூர்யா  அண்மையில் பேசிய கருத்து இங்கே சர்ச்சை ஆனது. இதே கருத்தை ரஜினிகாந்த் பேசியிருந்தால் பிரதமர் மோடி கேட்டிருப்பார் என்று இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். சூர்யா பேசினாலும் மோடி கேட்பார்.

புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து சூர்யா பேசும் கருத்துகள் வரவேற்கத்தகுந்தவை. எதிர்காலத்தில் மக்களுக்கு அவரது தொண்டு தேவையாக இருக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 
 நடிகர் சூர்யா நடிப்பில் ‘காப்பான்’ படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் ரஜினிகாந்த், புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியதைப் பற்றி குறிப்பிட்டு பேசினார்.

 
 “கே.வி.ஆனந்த் ஒரு திறமையான இயக்குனர். அவருடைய  இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காப்பான்’ படம் நிச்சயம் வெற்றி பெறும். நடிகர் சூர்யா விடாமுயற்சியால் சினிமாவில் முன்னேறி இருக்கிறார். அவருடைய முதல் படமான ‘நேருக்கு நேர்’ படத்தில் சூர்யா நடிப்பு பேசப்படும்படியாக இல்லாமல் போனது. ஆனால், அதன்பிறகு பாலாவின் ‘நந்தா’, ‘பிதாமகன்’ படங்களில் சிறந்த நடிகராக தன்னை செதுக்கிக்கொண்டு இந்த இடத்துக்கு வந்துள்ளார்.‘காக்க காக்க’, ‘கஜினி’, ‘அயன்’ என்று பல நல்ல படங்களில் சிறந்த  நடிப்பை சூர்யா வெளிப்படுத்தியிருக்கிறார்.


 சூர்யாவையும், கார்த்தியையும் ஒழுக்கமானவர்களாக சிவகுமார் வளர்த்திருக்கிறார். இருவருமே நல்ல பிள்ளைகளாக உருவாகி இருக்கிறார்கள். புதிய கல்வி கொள்கை குறித்து சூர்யா  அண்மையில் பேசிய கருத்து இங்கே சர்ச்சை ஆனது. இதே கருத்தை ரஜினிகாந்த் பேசியிருந்தால் பிரதமர் மோடி கேட்டிருப்பார் என்று இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். சூர்யா பேசினாலும் மோடி கேட்பார். இந்த விஷயத்தில் சூர்யா தெரிவித்த கருத்தை நான் ஆதரிக்கிறேன். 
மாணவர்களுக்கு அகரம் அறக்கட்டளை மூலம் நிறைய உதவிகளை அவர் செய்து வருகிறார். மாணவர்கள் படும் கஷ்டங்களை நேரில் பார்த்து அறிந்த அனுபவம் அவருக்கு உள்ளது. எனவே சூர்யா பேசும் கருத்துகள் வரவேற்கத்தகுந்தவை. எதிர்காலத்தில் மக்களுக்கு அவரது தொண்டு தேவையாக இருக்கும்.” என்று ரஜினிகாந்த் பேசினார்.

 
புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசிய பேச்சுக்கு பாஜக தலைவர்களும் அதிமுகவில் சில அமைச்சர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக சூர்யா வெளியிட்ட அறிக்கைக்கு பிறகு, அவருடைய கருத்தை ஆதரித்து பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்துவருகிறார்கள்.

click me!