அமைதியில் மூழ்கிய ரஜினியை ஓயாமல் அழைக்கும் ரசிகர்கள்... அதிரடியாக ரசிகர்களுக்கு தடை போட்ட ரஜினி மன்றம்..!

By Asianet TamilFirst Published Sep 10, 2020, 8:47 PM IST
Highlights

போஸ்டர் அடித்து அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்களை, போஸ்டர் அடிக்கக் கூடாது என்று ரஜினி மக்கள் மன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

  நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் குதிக்கப்போவதாக கடந்த 2017-ம் ஆண்டில் அறிவித்தார். அப்போது முதலே ரஜினி ரசிகர்கள், அவருடைய அரசியல் வருகைக்காக காத்திருக்கிறார்கள். ஆனால், 3 ஆண்டுகள் கடக்க உள்ள நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி வெளிப்படையாக எதுவும் தெரியவில்லை. கடந்த மார்ச் மாதத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரஜினி, தான் முதல்வர் வேட்பாளர் கிடையாது உள்பட 3 விஷயங்களைக் குறிப்பிட்டு பேசினார்.
அதை மக்களிடம் தெரிவித்து எழுச்சி உண்டாக்குங்கள் என்றும் ரஜினி தெரிவித்தார். ஆனால், அதன்பிறகு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரஜினி அமைதியாகிவிட்டார். தேர்தல் நெருங்கிவரும் வேளையில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. ஆட்சி மாற்றம்; அரசியல் மாற்றம் என முழங்கிய ரஜினியின் அமைதி, ரஜினி ரசிகர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போஸ்டர்கள் அடித்து, ‘இப்போது இல்லைன்னா எப்போதும் இல்லை’ என்று ரஜினி சொன்ன வாக்கியத்தைச் சொல்லி ரஜினியை அரசியலுக்கு அழைக்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இவ்வாறு போஸ்டர் அடித்து ஒட்டுவதற்கு ரஜினி மன்ற நிர்வாகிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக வாய்மொழியாக, தலைமையிடமிருந்து உத்தரவு வரும்வரை போஸ்டர்களை அடிக்க வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ரஜினி ரசிகர்கள் தன்னிச்சையாக செயல்படக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

click me!