
1996 ம் ஆண்டு ஜெயலலிதா எதிர்ப்பு அலை தமிழகம் எங்கும் பலமாக வீசிய நேரம். தமிழகத்தை இனி ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று குரல் கொடுத்தார் ரஜினி.
அதிமுக-காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து, மூப்பனார் தலைமையில் தமாகா உருவானது.
நீங்கள் நேரடியாக அரசியலுக்கு வாருங்கள், நாங்கள் கூட இருக்கிறோம் என்று ரஜினியிடம் சொன்னார் மூப்பனார். மறைந்த பத்திரிகையாளர் சோ.ராமசாமியும் அதையே சொன்னார்.
அந்த நேரத்தில், தமக்கே உரிய ராஜ தந்திரத்துடன், ரஜினியின் வருகைக்கு முற்றுப்புள்ளி வைத்து, தமாகா வுடன் கூட்டணி அமைத்து, வெற்றி பெற்று முதல்வரானார் கருணாநிதி.
அப்போதே ரஜினி, அரசியலுக்கு வந்திருந்தால், அவர் முதல்வராக ஆகி இருப்பார். ஆனால் அலட்சியமாக இருந்து விட்டார்.
அதன் பிறகு, எப்போது வருவேன், எப்படி வருவேன் என்று தெரியாது... ஆனால் நிச்சயம் வருவேன் என்று படத்தில் பன்ச் டயலாக் பேசியதோடு சரி. அவரது ரசிகர்கள் காத்திருந்து, காத்திருந்து ஏமார்ந்து போயினர்.
அது முடிந்து 21 வருடங்கள் முடிந்து விட்டன. ரஜினி ரசிகர்கள் பலருக்கும் 50 வயதை தாண்டி விட்டது. இளம் தலைமுறை ரசிகர்கள் பலரும் விஜய், அஜித் பக்கமே அதிக அளவில் இருக்கின்றனர்.
மேலும், லிங்கா படம் தொடர்பான பிரச்சினை ரஜினியை ரொம்பவே அப்செட் ஆக்கி விட்டது. அடுத்து வந்த கபாலி, வெற்றியா? தோல்வியா? என பட்டிமன்றமே நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், அவரது அரசியல் ஆசையை அதிகப் படுத்தி இருக்கிறது பாஜக. தனி கட்சி தொடங்கலாமா? பாஜக வில் சேரலாமா? என்ற குழப்பத்தில் இருந்து இன்னும் அவர் வெளிவரவில்லை.
இது ஒரு புறம் இருக்க, ஜெயலலிதாவின் மரணம், கருணாநிதியின் செயலிழப்பு, ஆகியற்றை காரணம் காட்டி, தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் இருப்பதாக ரஜினி கூறி வந்தார்.
அந்த வெற்றிடத்தை, தம்மால் நிரப்ப முடியும் என்ற நம்பிக்கையும் அவருக்குள் இருக்கிறது. ஆனால், அது எந்த அளவுக்கு சாத்தியம் என்ற அச்சமும் ஒரு பக்கம் அவருக்கு இருக்கிறது.
தமிழக இளைஞர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டமே அதற்கு முக்கிய காரணமாகும்.
அரசியல் வாதிகள் யாரையும் அனுமதிக்காமல் இளைஞர்கள் நடத்திய அந்த போராட்டத்திற்கு, ஓட்டு மொத்த தமிழகமும் ஆதரவளித்த விதம், செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளையே யோசிக்க வைத்திருக்கும் நிலையில், ரஜினியும் அதற்கு விதி விலக்கு அல்ல.
மேலும், செல்வாக்குடன் வலம் வந்த விஜயகாந்த், கடந்த தேர்தலில் டெபாசிட் கூட வாங்க முடியாமல் தோற்றத்தையும் அவர் மறக்கவில்லை.
இதுபோன்ற காரணங்களும், தமிழக மக்கள் மத்தியில் சினிமா நடிகர்களுக்கு முன்போல வரவேற்பு இருக்குமா? என்ற சந்தேகமும் அவருக்கு உள்ளது.
மேலும், 1996 ம் ஆண்டு கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விட்ட அவர், இந்த நேரத்தில் அதே செல்வாக்கு கிடைக்காது என்றும் பலவாறாக யோசிக்கிறார்.
அதனால், சமீபத்திய படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி அடையாத வறிய நிலையில், ரஜினி அரசியலில் வந்து என்ன சாதிக்க போகிறார்? என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.