
சமூக விரோதிகள் யார் என்பதை கருத்து ஜாடை காட்டி அம்பலபடுத்தி மனசாட்சி குன்றாது மக்களிடம் ரஜினி காந்த் உண்மையை பேசி இருப்பதாக அதிமுகவின் நமது அம்மா நாளிதழ் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த், போராட்டத்தை திசைதிருப்பியது விஷமிகள் தான், அந்த விஷயத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டுகிறேன். அவர் சமூக விரோதிகளை அடக்கி வைத்திருந்தார். தற்போது ஆட்சியில் இருக்கும் அரசும் சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமையை பாராட்டி பேசியினார். அதுமட்டுமல்ல, தூத்துக்குடியில் அசம்பாவிதம் நடந்தததற்கு உளவுத்துறை தான் பொறுப்பு. இது உளவுத்துறையின் தவறே. எல்லாத்திற்கும் ராஜினாமா கேட்பது நியாயம் ஆகாது. எந்த பிரச்சினைக்கும் ராஜினாமா செய்வது என்பது தீர்வாகாது என எடப்பாடி ஆட்சிக்கு ஆதரவான கருத்தை கூறியதால், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழில் ரஜினிகாந்தின் கருத்தை வரவேற்று கட்டுரை வெளியாகியுள்ளது.
காலிகள் ஒழிப்பும், கபாலியின் வாழ்த்தும் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள கட்டுரையில், “தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்த் மனம் திறந்து மனச்சாட்சியோடு பேசியிருக்கிறார். விஷக்கிருமிகளான சமூக விரோதிகளை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஒடுக்கி வைத்திருந்தார் என்று ரஜினிகாந்த் கூறியது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சமூக விரோதிகள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்ததால் தான் அது வன்முறை வெறியாட்டமாக வடிவம் எடுத்தது என்ற முதலமைச்சர் பழனிசாமியின் கருத்தையே ரஜினியும் வழிமொழிந்திருப்பது வரவேற்கத்தக்கது. ரஜினி மறைமுகமாக சுட்டிக்காட்டிய விஷக்கிருமிகளும், சமூகவிரோதிகளும் திமுகவினர்தான். பிரச்சினைக்கு ராஜினாமா முடிவல்ல என ரஜினி கூறியது பதவி ஆசை உள்ள தலைவர்களுக்கு சரியான பாடம். ராஜினாமா செய்வது என்பது பிரச்னைக்கு தீர்வாகாது என நெத்தியடி பதில் கூறி பதவிப்பித்து பிடித்து அலையும் மாதிரி தலைவர்களுக்கு ரஜினி சரியாக வேப்பிலை அடித்திருகிறார்.
எதற்கெடுத்தாலும் ராஜினாமா செய் என கூறி வரும் கம்யூனிஸ்டுகளுக்கும் ரஜினியின் பதில் புத்தியில் உரைக்க புகட்டப்பட்ட மருத்து. சமூக விரோதிகள் யார் என்பதை கருத்து ஜாடை காட்டி அம்பலபடுத்தி மனசாட்சி குன்றாது மக்களிடம் ரஜினி காந்த் உண்மையை பேசி இருப்பதாகவும் அது வரவேற்கத்தக்கது என்றும் கட்டுரையில் வன்முறைக்கு எதிரான இயக்கம் அதிமுக என்பதை ரஜினி வழிமொழிந்துள்ளார் என அதில் கூறப்பட்டுள்ளது.