
தமிழகத்தில் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது என்றும் அதை மீறி ரஜினி, கமலால் அரசியல் செய்ய முடியாது என்றும் பாஜகவின் மூத்த தலைவரும், எம்.பியுமான சத்ருகன் சின்ஹா கூறியுள்ளார்.
நடிகர் கமல் ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி அரசியலில தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அரசியலுக்கு வருவதாக 20 ஆண்டுகளுக்கு மேலாக பேசப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், சில மாதங்களுக்கு முன்புதான் தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார். கட்சி தொடங்குவதற்கான வேலைகளில் அவர் இறங்கியுள்ளார்.
இந்த நிலையில், பாஜகவின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சத்ருகன் சின்கா, ரஜினி, கமல் அரசியல் வருகை குறித்து, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், ரஜினியும் கமலும் எனது நண்பர்கள்தான். அவர்கள் அரசியல் களம் புகும்முன் அதற்கான திரைக்கதைகளை வகுத்துவிட்டுதான் வந்திருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
ஆனால், தங்களது அரசியல் பிரவேசம் குறித்து அவர்கள் என்னிடம் அறிவுரை கேட்கவில்லை. கேட்டிருந்தால் வேண்டாமென்று அவர்களைத் தடுத்திருப்பேன். அரசியலில் இருக்கும் பல கண்ணி வெடிகள் குறித்து அவர்களுக்கு விளக்கியிருப்பேன். அரசியல் என்பது அவர்கள் நினைப்பது போன்று ரோஜா படுக்கை அல்ல. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின்க்கு மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ளது. அதை மீறி ரஜினி, கமலால் அரசியல் செய்ய முடியாது என்று சத்ருகன் சின்ஹா கூறியுள்ளார்.