கமலின் நரி கணக்கிற்கு வலியச் சென்று பலிகடாவாகும் ரஜினி... ஆத்திரமூட்டும் அதிமுக..!

By Thiraviaraj RMFirst Published Nov 21, 2019, 11:36 AM IST
Highlights

பகுத்தறிவு, கம்யூனிஸம் என்று பலவேசம் போட்டு ஆன்மிகத்திற்கு எதிரான நிலைப்பாடு கொண்டு அலையும் உளறல் நாயகனோடு கரம் கோர்ப்பது என்பது எலியும், பூணையும் இணைந்து குடித்தனம் நடத்தப்போகிறோம் என்பதற்கு சமம். 
 

உளறல் நாயகனோடு கரம் கோர்ப்பது என்பது எலியும், பூணையும் இணைந்து குடித்தனம் நடத்தப்போகிறோம் என்பதற்கு சமம் என ரஜினிக்கு அதிமுக எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ரஜினியும் , கமல்ஹாசனும் அரசியலில் இணைந்து செயல்படப்போவதாக அறிவித்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், பதினாறு வயதும் பதராகும் பொழுதும் என்கிற தலைப்பில் நமது அம்மா நாளிதழில் கட்டுரை வெளியாகி இருக்கிறது.

’’அதுசரி,தொடங்கப்பட்ட கமலின் கட்சி ஒரே ஒரு தேர்தலோடு முடங்கிப்போய் விட்டது. இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கே அஞ்சி நடுங்கிப்போய் விட்டது. இந்த நிலையில் கட்சி தொடங்காத ரஜினிகாந்த் மக்கள் நலன் கருதி கமலோடு இணைந்து செயல்படுவேன் என்பது ஆண்டிகள் கூடி மடம் கட்ட திட்டமிடுகிற மடத்தனம் என்பதை காலம் அவர்களுக்கு நிச்சயமாய் உணர்த்தும்.

 

ஆனாலும் ஒன்று, சினிமாவில் ரஜினியோடு போட்டிபோட்டு தோற்றுவிட்ட கமல், எங்கே அரசியல் கட்சி தொடங்கி ரஜினி தன்னை விட கொஞ்சம் கூடுதலாக ஓட்டு வாங்கி  அரசியலிலும்  உன்னைவிட நான் பெரியவன் என்பதை நிரூபித்து விடப்போகிறாரே என கணக்குப்போட்டு அவரை தன்னோடு இணைத்து ரஜினியின் தனிச் செல்வாக்கை மறைத்துவிட வேண்டும் என்கிற அவரது நரி கணக்கிற்கு வலியச் சென்று  ரஜினி பலிகடா ஆவேன் என்பது பரிதாபம் தான். 

ஆன்மீக அரசியலை தொடங்கி இருநூற்றி முப்பத்தி நான்கு தொகுதிகளிலும் தனியாக போட்டியிடப்போகிறேன் என்று அறிவிப்பு செய்த ரஜினிக்கு பகுத்தறிவு, கம்யூனிஸம் என்று பலவேசம் போட்டு ஆன்மிகத்திற்கு எதிரான நிலைப்பாடு கொண்டு அலையும் உளறல் நாயகனோடு கரம் கோர்ப்பது என்பது எலியும், பூணையும் இணைந்து குடித்தனம் நடத்தப்போகிறோம் என்பதற்கு சமம்.

 

அது சரி, கல்லைக்கட்டிக்கொண்டு கடலில் குதிப்பதும், கமலோடு கூட்டு வைத்துக் கொண்டு அரசியலில் ஜெயிப்பேன் என்பதும் வெந்த நெல்லை முளைக்க வைக்க முயற்சிக்கிற கோமாளி காரியம் என்பதை காலம் ரஜினிக்கு கட்டாயம் கற்பிக்கத்தான் போகிறது’’என விமர்சித்துள்ளது. 

click me!