3 மாதங்கள் கட்சி பணி... 6 மாதங்கள் தேர்தல் பணி... இடையில் சூட்டிங் பணி... மா.செ.க்களிடம் ரஜினி சொன்ன தகவல்!

By Asianet TamilFirst Published Mar 6, 2020, 7:19 AM IST
Highlights

பாஜக முத்திரை குறித்துதான் பல மாவட்ட செயலாளர்களும் தங்கள் ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளனர். தங்கள் மீதான பாஜக முத்திரை குறித்து பொதுமக்களும் ரசிகர்களும் எழுப்பும் கேள்வியை எதிர்கொள்ளமுடியவில்லை என்று கேள்வி எழுப்பிய ரசிகர்கள், குறிப்பாக யாருக்கும் ஆதரவாகப் பேசக்கூடாது, நாம் தனித்து இயங்க வேண்டும் என்று ரஜினியிடம் தெரிவித்துள்ளனர். இந்தக் கேள்விகளுக்கு அமைதியைக் கடைப்பிடித்த ரஜினி, ‘தன் மீது பாஜக முத்திரையை எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பரப்புவதாக’ விளக்கம் அளித்ததாகக் கூறப்படுகிறது.  
 

கட்சி தொடங்கிய பிறகு மூன்று மாதங்கள் முழுமையாக கட்சி பணி; 6 மாதங்கள் தேர்தல் பணி. தயார் என்று சொன்னவுடன் வேலையைத் தொடங்கிவிட வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுடன் ரஜினி நடத்திய ஆலோசனையில் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சித் தொடங்குவதற்கான பணிகளை ரஜினி தொடங்கியுள்ளார். தேர்தலில் தனது படையும் இருக்கும் என்று ரஜினி அறிவித்து இரண்டேகால் ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன்பிறகு அவர் அடுத்தடுத்து படங்களில் நடித்துவருவதால், சொன்னப்படி கட்சி ஆரம்பிப்பாரா என்ற எண்ணம் அவருடைய  ரசிகர்களுக்கே ஏற்பட்டது. ஓராண்டுக்கு முன்பு ரஜினி மன்ற செயலாளர்களைச் சந்தித்த ரஜினி அதன்பிறகு அவர்களைச் சந்திக்கவேயில்லை. இந்நிலையில் 37 மாவட்ட செயலாளர்களை அழைத்து சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார் ரஜினி.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் கருத்தை ரஜினி கேட்டறிந்தார். அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதில் அளித்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நிலவரம்; கட்சி ஆரம்பித்தால் ஏற்படும் ஆதரவு, எதிர்ப்பெல்லாம் குறித்து ரஜினி கேட்டறிந்தார். எந்தெந்த கட்சிகளுடன், கூட்டணி வைக்கலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “ நாங்கள் நிறைய தகவல்களை பரிமாறிக் கொண்டோம். அவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தேன். ஒரு விஷயத்தில், எனக்கு திருப்தி கிடைக்கவில்லை. தனிப்பட்ட முறையில், எனக்கு ஏமாற்றம்தான். அதுகுறித்து, இப்போது கூற விரும்பவில்லை; நேரம் வரும்போது கூறுகிறேன். அரசியல் வெற்றிடத்தை, கமலுடன் இணைந்து நிரப்புவது குறித்து, காலம்தான் பதில் சொல்லும். அரசியல் கட்சி பெயர், கொடி குறித்து இப்போது கூற விரும்பவில்லை” என்று ரஜினி தெரிவித்தார்.
கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட செயலாளர்கள், இங்கே பேசியது குறித்து வெளியே மூச் விடக்கூடாது என்று ரஜினி எச்சரித்து அனுப்பினார். என்றபோதும் இக்கூட்டத்தில் ரஜினி பேசியது குறித்து ரஜினி மக்கள் மன்ற வட்டாரங்களில் விசாரித்தபோது சில தகவல்கள் கிடைத்தன. கூட்டத்தில் ரஜினி பேசும்போது, “எது பேசினாலும் பரபரப்பாகிவிட்டுவிடுகிறார்கள். நான் 5-ம் தேதி ஆலோசனை கூட்டம் வைத்ததற்கு முகூர்த்த நாள் என்று எழுதுகிறார்கள்.  இன்றைய தினம் எனக்கு ஃப்ரியாக இருப்பதால், இன்று கூட்டம் நடத்தினேன். பத்திரிகைகள் எழுதுவதுவதைப் பார்த்தால் நமக்கே குழப்பம் வந்துவிடும். எனவே, ரொம்ப எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கட்சி தொடங்கிய பிறகு மூன்று மாதங்கள் முழுமையாக கட்சி பணி; 6 மாதங்கள் தேர்தல் பணி. தயார் என்று சொன்னவுடன் வேலையைத் தொடங்கிவிட வேண்டும்” என்று ரஜினி பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜக முத்திரை குறித்துதான் பல மாவட்ட செயலாளர்களும் தங்கள் ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளனர். தங்கள் மீதான பாஜக முத்திரை குறித்து பொதுமக்களும் ரசிகர்களும் எழுப்பும் கேள்வியை எதிர்கொள்ளமுடியவில்லை என்று கேள்வி எழுப்பிய ரசிகர்கள், குறிப்பாக யாருக்கும் ஆதரவாகப் பேசக்கூடாது, நாம் தனித்து இயங்க வேண்டும் என்று ரஜினியிடம் தெரிவித்துள்ளனர். இந்தக் கேள்விகளுக்கு அமைதியைக் கடைப்பிடித்த ரஜினி, ‘தன் மீது பாஜக முத்திரையை எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பரப்புவதாக’ விளக்கம் அளித்ததாகக் கூறப்படுகிறது.  
தேர்தலுக்கு இன்னும் சரியாக ஓராண்டு உள்ள நிலையில், ரஜினி இந்த ஓராண்டு எப்படி பணியாற்ற வேண்டும் என்பதையே நேற்றைய கூட்டத்தில் எடுத்துரைத்துள்ளார். இதன் அடிப்படையில் மே மாதம் வரை ரஜினி சினிமா சூட்டிங்கிக்ல் பிஸியாக இருப்பார் என்றும், அதன்பிறகே கட்சித்தொடங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

click me!