’படிச்சது நாலெழுத்து பெரிய்ய்ய படிப்பு’ (எஸ்.எஸ்.எல்.சி)... வாழ்க்கை பாடத்தில் பி.ஹெச்.டி கற்றுக்கொடுக்கும் ராஜேந்திர பாலாஜி..!

By Thiraviaraj RMFirst Published Sep 26, 2019, 4:06 PM IST
Highlights

அதிரடி சரவெடியாய் மைக் கிடைக்கும் இடமெல்லாம் தனது எதார்த்தப்பேச்சால் எதுகை, மோனையோடு பெரிய கருத்துக்களை சாதரணமாக தட்டிவிட்டு ஸ்கோர் செய்து வருகிறார் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. 
 

தனது துறையான பால்வளத்துறையிலேயே ஊழல் நடக்கிறது என உண்மையை போட்டுடைத்த வெள்ளந்தி மனசுக்காரர்தான் இந்த ராஜேந்திரபாலாஜி.  அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட்டிலும், நயகரா நீர் வீழ்ச்சியிலும், தமிழரின் பாரம்பர உடையை மாற்றாமல் நடைமுறை எதார்த்தோடு சென்றவர் இவர். இப்படி செல்லும் இடமெல்லாம் மீடியாக்களும் பொதுமக்களின் கவனமும் தற்போது ராஜேந்திட பாலாஜி மீது குவியத் தொடங்கி உள்ளது. 

அதிமுக தொடர்பான கருத்துக்கள் என்றால் ஜெயகுமார் பேட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய சூழல் தற்போது இல்லை. அந்த அளவிற்கு ராஜேந்திர பாலாஜி கலக்கி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி பொதுமக்கள் புடைசூழ நடத்திய விவாத கருத்தரங்கில் விறகு பிளப்பது போல தனது வாதத்தை பிளந்து கட்டினார் ராஜேந்திர பாலாஜி. 

சிவகாசியில் சாதாரண குடும்பத்தை சேர்ந்த தானும் தனது சகோதரிகளும் ஐந்து வீடுகள் தள்ளி இருக்கும் ஆட்டுக்கல்லில் அம்மாவுக்காக மாவை ஆட்டிக் கொடுப்போம். இந்த கொடுமையை புரிந்து கொண்ட புரட்சித் தலைவி ஜெயலலிதா பிற்காலத்தில் வீட்டுக்கு வீடு மிக்சி - கிரைண்டர் அளித்தார். தற்போது இல்லத்தரசிகள் அனைவரும் இதனால், மாவரைக்க வேண்டிய கவலையில் இருந்து மீண்டு நிம்மதியாக வாழ்கின்றனர். இதே போன்று பல சுவாரஸ்யமான தனது வாழ்க்கையோடு தொடர்புடைய பல நிகழ்வுகளை வைத்து ஜெயலலிதா எவ்வாறு வரலாற்றுத் தடம்பதித்தார் என்பதை அடுக்கடுக்காக ராஜேந்திர பாலஜி விவரித்தார். 

இதே போன்று திருத்தங்கல்லை சேர்ந்த நபர் ஒருவர் தான் அமைச்சராக இருந்தபோது மனைவியுடன் போட்ட சண்டையால் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம். அவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்ததும் ராஜேந்திர பாலாஜிதானாம். ஒரு கட்டத்தில் தீக்காயங்களை குனப்படுத்த 60 லட்சம் ரூபாய் செலவாகும் என்று மருத்துவர்கள் கூறி விட்டார்களாம். இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் ராஜேந்திர பாலாஜி அவரை சந்திக்காமல் தவிர்த்துள்ளார். 

இரண்டு நாட்கள் கழித்து ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் ராஜேந்திர பாலாஜிக்கு போனில் சொன்ன விஷயம் அவரை ஆட வைத்து விட்டதாம். அதாவது சட்டபேரவை வளாகத்தில் ஜெயலலிதா முன்பாக தீக்காயங்களுடன் இருந்த அந்த நபர், காரை மறித்து தீக்காயங்களை காட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயலலிதா அவரை போயஸ்கர்டனுக்கு வரச்சொல்லி விட்டு சென்று விட்டாராம். ராஜேந்திர பாலாஜியும் உடன் வரவேண்டும் என ஜெயலலிதா கூறிவிட்டு சென்று  விட்டாராம். 

இதனால், தனது பதவிக்கே வேட்டு தான் என பதறியடித்து ஓடினாராம். பின்னர் தான் தெரிந்ததாம் அந்த நபருக்கு உடனடி 60 லட்சம் ரூபாயை அள்ளிக் கொடுத்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முழுவதும் குணப்படுத்தினார். இப்படி தனி மனிதர்களுக்கான பிரச்னைகளை மையப்படுத்தி மட்டுமின்றி சமூக அறிவியல் சார்ந்து மக்களுக்கான உதவிகளை செய்தவர் ஜெயலலிதா என ராஜேந்திர பாலாஜியை தெரிவித்தார். 

ஏழை மக்களுக்கு  மிக்ஸி கிரைண்டர், மின்விசிறி, லேப்டாப், சைக்கிள் அருமையான கான்கிரீட் வீடுகள் என மக்களுக்கு தேவையான அத்தனை விஷயங்களையும் பார்த்துப் பார்த்து செய்தவர் ஜெயலலிதா. எனவே தமிழகத்தின் நவீன சிற்பி ஜெயலலிதாதான் என ஒரே போடாகப் போட்டார் ராஜேந்திர பாலாஜி. அமைச்சரது பேச்சின் ஆரம்பத்தில் கூறியது போல பெரிய படிப்பு படிக்காவிட்டாலும் விவாததிற்கான பேச்சு என்றாலும் கூட அதிலும் வாழ்க்கைக்கான தத்துவங்களை மிக அழகாக விவரித்தார் என அனைவரும் பாராட்டினர். 

குறிப்பு: இந்த விவாதத்தில் திமுக சார்பாக கலந்து கொண்ட திமுக எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், ராஜேந்திர பாலாஜி பேசியபோது விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டே இருந்தார். 
   

click me!