நாங்குநேரியை திமுக விட்டுக் கொடுத்ததில் கோடிகள் கைமாற்றம்... பகீர் கிளப்பும் ராஜேந்திர பாலாஜி!

By Asianet TamilFirst Published Oct 10, 2019, 10:34 PM IST
Highlights

நாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதியில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும். மதம், இனத்தைச் சொல்லி இனி திமுகவால் ஓட்டுக்கேட்க முடியாது. 

நாங்குநேரி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு திமுக விட்டுகொடுத்துள்ளது. திமுக விட்டுக்கொடுத்ததில் ரூ. 20 கோடி கைமாறியுள்ளது என்று தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு கிராமத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். 
  “நாங்குநேரி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு திமுக விட்டுகொடுத்துள்ளது. திமுக விட்டுக்கொடுத்ததில் ரூ. 20 கோடி கைமாறியுள்ளது. 2 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளதாகவும் இதில் 200 கோடி ரூபாயைத் தேர்தலுக்கு செலவழிக்கப் போவதாகவும் காங்கிரஸில் சொல்கிறார்கள். முன்பு இருந்த காங்கிரஸ் கட்சி இப்போது இல்லை.
அதிமுக வேட்பாளர் சாதாரண தொண்டர். அவர் பணத்தை நம்பி நிற்காமல் மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறார். நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் வெளியூரில் பிறந்து இந்த மாவட்டத்தில் நிற்கிறார். தொகுதி விட்டு தொகுதி மாறி நிற்பது தலைவர்களுக்கு மட்டும்தான் பொருந்தும். ராகுல், சோனியா போன்ற முன்னணி தலைவர்கள் எந்தத் தொகுதியில் வேண்டுமானாலும் நிற்கலாம். ஆனால் வெளி மாவட்டத்தை சேர்ந்தவரை தேர்தலில் நிறுத்தியிருப்பதை ஏற்க முடியாது.


நாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதியில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும். மதம், இனத்தைச் சொல்லி இனி திமுகவால் ஓட்டுக்கேட்க முடியாது. எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றி பெறுவார்.” என்று ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

click me!