வைகோவே வழிக்கு வந்துட்டாரு... ஸ்டாலின் அடங்க மாட்டேங்குறாரே... பொங்கியெழும் ராஜேந்திரபாலாஜி..!

By Thiraviaraj RMFirst Published Aug 20, 2019, 4:49 PM IST
Highlights

பால் விலை உயர்வால் உள்ளாட்சி தேர்தல் தள்ளிப் போக வாய்ப்பு இல்லை என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். 
 

பால் விலை உயர்வால் உள்ளாட்சி தேர்தல் தள்ளிப் போக வாய்ப்பு இல்லை என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். 

விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’’தமிழகத்தில் பால் விலையை உயர்த்தக்கூடாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருந்தார். ஆனால், கால்நடை தீவனம், தவிடு போன்றவற்றின் விலை ஏற்றத்தால் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என தமிழக பால் உற்பத்தியாள்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதேபோல் ஆவின் நிர்வாகத்தில் நிர்வாக செலவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும் பால் விலையை உயர்த்த வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு தற்போது பால் விலை மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக பால் விலை உயர்த்தப்படவில்லை என்பதை மக்கள் புரிந்து கொண்டு தற்போதைய விலை உயர்வை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் ரூ.1, அல்லது ரூ.1.50 என உயர்த்தியிருந்தால் தற்போதைய உயர்வு பெரிதாக தெரிந்திருக்காது. மக்கள் மீது சுமையை ஏற்ற வேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை. அதேநேரம் பால் கொள்முதல் விலையை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியோடு உயர்த்தியுள்ளோம். மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் பால் விலை குறைவாகத்தான் இருக்கிறது. தனியார் பால் விலையை விட ஆவின் விலை குறைவுதான்.

பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதை வைகோ வரவேற்று உள்ளார். விற்பனை விலையையும் அதே அளவுக்கு உயர்த்தி இருக்கலாம் என கருத்து தெரிவித்திருக்கிறார். பல்வேறு தரப்பினரும் இதே கருத்தை கொண்டிருந்தாலும், அவர்கள் எதிர்க்கட்சிகளாக இருப்பதால், குற்றம்சாட்டுகிறார்கள். இதுபற்றி முதல்வரிடம் பேசி கொண்டுதான் உள்ளோம். பால் விலை உயர்வால் உள்ளாட்சி தேர்தல் தள்ளிப் போகும் என கூற முடியாது. பொது நிறுவனங்களில் நலிவு ஏற்படும்போது அதை பாதுகாப்பது அரசின் கடமை. அதைத்தான் அரசு செய்துள்ளது. அரசின் முடிவுக்கு மக்கள் ஆதரவாகத்தான் இருப்பார்கள்.

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வெளியில் இருந்து கொண்டு பயங்கரவாதிகளை ஊக்குவிக்கிறார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து கொண்டு பிரச்சினைகளை தூண்டுகிறார். காஷ்மீர் பிரச்சினையில் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் எடுத்த முடிவு சிறந்த முடிவு’’ என அவர் தெரிவித்தார்.

click me!