ராஜேந்திர பாலாஜி இந்தியன்.. எங்கு வேண்டுமானாலும் போகலாம் வரலாம்.. கதறவிடும் கரு.நாகராஜன்.

By Ezhilarasan BabuFirst Published Dec 30, 2021, 4:41 PM IST
Highlights

கே.டி ராஜேந்திர பாலாஜி ஒரு  இந்தியன், இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் அவர் போகலாம், வரலாம், அவர் வெளிநாடுகளுக்கு கூட போகலாம், வரலாம் எல்லாருக்கும் எல்லா இடங்களுக்கும் போக வர உரிமையிருக்கிறது. 

முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி இந்தியன் என்றும், அவர் இந்தியாவில் எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும் போகலாம் என்றும், பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் கூறியுள்ளார்.  கே.டி ராஜேந்திர பாலாஜி நாங்களா ஒளித்து வைத்திருக்கிறோம் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், இதுபோல பலரும் பல வதந்திகளை பரப்புவது வாடிக்கையாகிவிட்டது என்றும் விமர்சித்துள்ளார். 

அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி ராஜேந்திர பாலாஜி. செல்வி ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவில் அதிகம் பேசப்பட்ட அமைச்சர்களில் இவரும் ஒருவர். தான் அதிமுக அமைச்சர் என்பதையும் மறந்து முழுக்க முழுக்க தன்னை ஒரு பாஜக தொண்டர் போலவே அவர் காட்டிக் கொண்டார் என்பதே அதற்கு காரணம். ' மோடி எங்கள் டாடி '  ' எங்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் மேலே இருக்கிற (மோடி) ஆண்டவன் பார்த்துக் கொள்வான்'   ' ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை'  ' எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ஸ்டாலினால் முதலமைச்சராக முடியாது'  ' ஸ்டாலின் ஒத்தைக்கு ஒத்த வர தயாரா'  என பல வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி பரபரப்பை ஏற்படுத்தியவர் ராஜேந்திரபாலாஜி.

திமுக ஆட்சிக்கு வந்தால் முதலில் கைது செய்யப்படுவது ராஜேந்திரபாலாஜியாகத்தான் இருக்கும் என்றும், அப்போது கூறப்பட்டது. அந்த அளவிற்கு அவர் திமுக தலைவர் ஸ்டாலினை மிக மோசமாக, தரக்குறைவாக பேசி வந்தார் என்பதே அதற்கு காரணம். இந்நிலையில்தான் கே.டி ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்தார் என அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் தன்னை கைது செய்யக் கூடாது என ஜாமீன் கேட்டு ராஜேந்திரபாலாஜி மனு தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் அவரது மனுவை ரத்து செய்தததை அடுத்து, ராஜேந்திர பாலாஜி கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். 

ஆனால் அவர் பெங்களூருக்கு தப்பிச் சென்றுவிட்டதாகவும், அவர் கேரளாவில் பதுங்கியுள்ளதாகவும், அவர் விருதுநகர் மாவட்டத்திலேயே பதுங்கி விட்டதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. போலீசார் இதுவரை பெங்களூருக்கும், கேரளா என பல மாநிலங்களுக்கு சென்று தேடியும் ராஜேந்திரபாலாஜி அகப்படவில்லை. முன்னதாக தனது ஜாமின் மனு ரத்து செய்யப்பட்டதை அடுத்து ராஜேந்திர பாலாஜி, வீட்டில் இருந்து  லுங்கி  பனியன் உடுத்தி டாட்டா ஏஸ் வாகனத்தின் மூலம், கிளீனராக மாறி வீட்டிலிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறினார் என்றும், அதே வாகனத்தின் மூலம் ஆனைக்குட்டம் அணை, புதுப்பட்டி, மங்கலம் வழியாக பயணித்து எரிச்சநந்தம் பகுதியில் பட்டாசு கம்பெனியின் அதிபர் ஒருவரின் இனோவா கார் மூலம் அழகாபுரி விளக்கு வழியாக மூணாறு சென்றார் என்றும், ஏறக்குறைய நான்கு மணி நேரத்தில் அவர் மாநில எல்லையை கடந்து, பெங்களூருவுக்கு சென்றார் என்றும், அதன் பிறகு அங்கிருந்து மும்பை சென்று ஒரு இனோவா கார் மூலம் டெல்லிக்கு சென்று பதுங்கி விட்டார் என்றும் தகவல் வெளியானது. இந்ந தகவலை அடுத்த தனிப்படை போலீசார் ராஜேந்திர பாலாஜியை தேடி டெல்லி விரைந்துள்ளனர். அங்கு பாஜக பிரமுகர் வீட்டில் அவர் பதுங்கி இருக்கிறாரா என்று போலீசார் சோதனை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் பாஜகதான் அவருக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வைத்துள்ளது என்ற கருத்து பரவலாக இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழக பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் இது குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டு வந்திருக்கிறது. இதேபோல இன்று திமுகவில் அமைச்சராக இருக்கிற செந்தில் பாலாஜி மீதும் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. அது தொடர்பான வழக்கும் நிலுவையில் இருந்துவருகிறது. இந்த நிலையில் அவரும் தொடர்ந்து வாய்தா பெற்று வருவதையும் பார்த்து வருகிறோம். தமிழகத்தில் அமைச்சர் பொறுப்பில் இருந்து வெளியில் வந்த பிறகு இதுபோன்ற புகார்கள் வருவது வழக்கமாகிவிட்டது. உண்மையில் இதில் தவறு நடந்திருந்தால் தவறுக்கு நிச்சயம் அவர்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். ஆனால் இதிலும் கூட அரசியல் லாபத்திற்காக பழிவாங்கும் போக்கு இருக்கிறத. அதேபோல கே.டி ராஜேந்திர பாலாஜிக்கு பாஜகதான் உதவுகிறது என்று பல வதந்திகள் பல கற்பனையான கதைகள் உலா வந்து கொண்டிருக்கிறது.

கே.டி ராஜேந்திர பாலாஜி ஒரு  இந்தியன், இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் அவர் போகலாம், வரலாம், அவர் வெளிநாடுகளுக்கு கூட போகலாம், வரலாம் எல்லாருக்கும் எல்லா இடங்களுக்கும் போக வர உரிமையிருக்கிறது. சட்டத்தின்படி அவர் மீதுள்ள வழக்கை அவர் சந்திக்க வேண்டும். சட்டத்தை மீறி இந்த வழக்கை சந்திக்காமல் அவர் எத்தனை நாளைக்கு தலைமறைவாக இருந்து விட முடியும். நிச்சயமாக அவர் இந்த வழக்கை சந்திப்பார். அவரது தரப்பு நியாயத்தை எடுத்து வைப்பதற்கு அவருக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் இதற்கும் பாஜகவுக்கும் முடிச்சு போடுவது வழக்கமான வேடிக்கையான கருத்து போல, இதையும் நாங்கள் வேடிக்கையானதாக கோமாளித்தனமானதாகத்தான் பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

click me!