ராஜபாளையம் கள நிலவரம்..! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கரை சேருவாரா?

By Selva KathirFirst Published Mar 31, 2021, 11:32 AM IST
Highlights

முக்குலத்தோர் வாக்குகளை பொறுத்தவரை அமமுக வேட்பாளருக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. இது அதிமுகவிற்கு பின்னடைவாக கருதப்பட்டாலும் தொகுதியில் உள்ள நாக்கியர்கள் அமைச்சரை ஆதரிக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் சமுதாய அடிப்படையிலான வாக்குகளை பாரக்கும் போது அமைச்சரே முன்னிலையில் உள்ளார். 

சிவகாசி தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் நிலையில் தொகுதியை மாற்றி ராஜபாளையத்தில் களம் இறங்கியுள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழக அமைச்சர்களில் மிகவும் அதிரடி பேர்வழியாக வலம் வந்தவர் ராஜேந்திர பாலாஜி. எவ்வித தயக்கமும் இல்லாமல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ஒருமையில் வசைபாடக்கூடிய அளவிற்கு துணிச்சலுடன் பேசி வந்தார் இவர். இதனால் சிவகாசி தொகுதியில் ராஜேந்திர பாலாஜியை தோற்கடிக்க கடந்த வருடம் முதலே திமுக தேர்தல் பணிகளை துவங்கியது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் சிவகாசி தொகுதியை காலி செய்துவிட்டு ராஜபாளையம் தொகுதி வேட்பாளராக போட்டியிடுகிறார் ராஜேந்திர பாலாஜி.

ராஜபாளையம் தொகுதியில் திமுக சார்பில் கடந்த முறை களம் இறக்கி வெற்றி பெற்ற தங்கபாண்டியன் மறுபடியும் வேட்பாளராகியுள்ளார். சிட்டிங் எம்எல்ஏ என்பதால் தொகுதியில் நல்ல பெயர் உள்ளது. ஆனால் எதிர்கட்சி எம்எல்ஏவாக இருந்த காரணத்தினால் கடந்தமுறை தங்கபாண்டியன் தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலவில்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார். இது அவருக்கு பலமாகவும் பலவீனமாகவும்  உள்ளது. அதே சமயம் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் கூட்டணியில் இருப்பது திமுக வேட்பாளருக்கு சாதகமாகவே உள்ளது.

இதே போல் அதிமுக கூட்டணியில் உள்ள த.மா.கா அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு கை கொடுக்கிறது. இந்த தொகுதியில் பாஜகாவிற்கும் ஓரளவு செல்வாக்கு இருப்பது அமைச்சருக்கு உதவும். இந்த தொகுதியை பொறுத்தவரை நாடார்கள் அதிகம் வசிக்க கூடியவர்கள். இதே போல் முக்குலத்தோர் சமுதாயத்தினரும் கணிசமாக உள்ளனர். நாக்கியர்களும் இந்த தொகுதியில் குறிப்பிட்டுச் சொல்லும் படி உள்ளனர். திமுக வேட்பாளர் தங்கபாண்டியன் நாடார் என்பதால் அவர் தனக்கு சமுதாய வாக்குகள் முழுமையாக கிடைக்கும் என்று நம்புகிறார். ஆனால் அமைச்சரோ உறவின் முறை நிர்வாகிகள் மூலம் சத்தமில்லாமல் நாடார் சமுதாய வாக்குகளை வளைத்து வருகிறார்.

முக்குலத்தோர் வாக்குகளை பொறுத்தவரை அமமுக வேட்பாளருக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. இது அதிமுகவிற்கு பின்னடைவாக கருதப்பட்டாலும் தொகுதியில் உள்ள நாக்கியர்கள் அமைச்சரை ஆதரிக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் சமுதாய அடிப்படையிலான வாக்குகளை பாரக்கும் போது அமைச்சரே முன்னிலையில் உள்ளார். இதே போல் தேர்தல் பணிகளில் அமைச்சருக்கு திமுக வேட்பாளரால் ஈடுகொடுக்க முடியவில்லை என்பது தெரிகிறது. இதே போல் பணத்தை அமைச்சர் தண்ணியாக செலவிடுவதும் திமுக தரப்பில் அதற்கான வாய்ப்பு இல்லாததும் பெரிய மைனஸ். ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது ராஜபாளையம் தொகுதியை பொறுத்தவரை தற்போதைய சூழலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கைகளே ஓங்கியிருக்கிறது.

click me!