
முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை சாதி பெயரை கூறி பேசியதாக புகார் எழுந்த நிலையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனை வரவேற்க சென்ற தன்னை சாதி பெயரை சொல்லி ஒருமையில் திட்டியதாக முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் புகார் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக இருப்பவர் ராஜேந்திரன். இவர் அப்பகுதி ஒன்றிய சேர்மன் தருமனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. தருமன் அதிமுகவை சேர்ந்தவர். இந்த நிலையில்தான் முதுகுளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரனை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தனது வீட்டிற்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அமைச்சர் வீட்டிற்கு சென்ற ராஜேந்திரனை, அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஜாதி ரீதியாக குற்றஞ்சாட்டியதாக புகார் எழுந்துள்ளது.
இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதுகுளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், அமைச்சர் என்னை ஜாதி சொல்லி திட்டினார். எஸ்சி.. எஸ்சி என்று சொல்லி மீண்டும் மீண்டும் திட்டினார். நான் சொல்வதை எதையும் நீ கேட்க மாட்டாயா? சேர்மேன் சொன்னால் மட்டும்தான் கேட்பாயா? என்று கேட்டார். மேலும் உன்னை இடமாற்றி காட்டட்டுமா? என்று கூறி என்னை ஜாதி ரீதியாக 6 முறை எஸ்சி என்று கூறி திட்டினார். எனக்கு 57 வயதாகிறது. இந்த வயதில் என்னை இப்படி யாரும் திட்டியது இல்லை. எனக்கு மனக்காயம் ஏற்பட்டுள்ளது. எனக்கு தூக்கம் இல்லை. சாப்பிட முடியவில்லை. இது பற்றி ஆட்சியர், துணை ஆட்சியரிடம் பேச முடியவில்லை. அதனால் இப்போது செய்தியாளர்களை சந்தித்து என் கஷ்டத்தை சொல்கிறேன் என்று முதுகுளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவம் முதுகுளத்தூரில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டார். முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை சாதி பெயரை கூறி பேசியதாக புகார் எழுந்த நிலையில் ராஜகண்ணப்பன் மாற்றப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.சிவசங்கர் போக்குவரத்துத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று ராஜகண்ணப்பன், எஸ்.எஸ்.சிவசங்கரின் துறைகளை மாற்றி ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் முதல் முறையாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.