சுங்கக்கட்டணத்தை உயர்த்துவது எவ்வகையிலும் சரியாக இருக்காது... அன்புமணி வலியுறுத்தல்!!

Published : Mar 30, 2022, 06:14 PM IST
சுங்கக்கட்டணத்தை உயர்த்துவது எவ்வகையிலும் சரியாக இருக்காது... அன்புமணி வலியுறுத்தல்!!

சுருக்கம்

சுங்கச்சாவடிகளை சீரமைப்பதற்கு முன் சுங்கக் கட்டணங்களை உயர்த்தக் கூடாது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 

சுங்கச்சாவடிகளை சீரமைப்பதற்கு முன் சுங்கக் கட்டணங்களை உயர்த்தக் கூடாது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வானகரம், செங்கல்பட்டு பரனூர், திண்டிவனம் ஆத்தூர் உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு சொந்தமான 24 சுங்கச்சாவடிகளில் நாளை நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களின் துயரங்களை உணராமல் அறிவிக்கப்பட்டுள்ள இந்த கட்டண உயர்வு கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 48 சுங்கச்சாவடிகளில் இரு சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டண உயர்வை சென்னை உயர்நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. மீதமுள்ள 46 சுங்கச்சாவடிகளில் 22 சுங்கச்சாவடிகளில் கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டது. அவை தவிர்த்த 24 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் ஒன்றாம் தேதி அதிகாலை முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப் படும் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்திருக்கிறது.

சுங்கக்கட்டண உயர்வு குறைந்தபட்சம் 10 ரூபாயாகவும், அதிகபட்சம் 85 ரூபாயாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா இப்போது எதிர்கொண்டு வரும் சூழலில் சுங்கக்கட்டணத்தை உயர்த்துவது எவ்வகையிலும் சரியாக இருக்காது. உக்ரைன் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்து விட்டதாகக் கூறி, பெட்ரோல், டீசல் விலை கடந்த 9 நாட்களாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.  9 நாட்களில் 8 தவணைகளில் பெட்ரோல், டீசல் விலைகள் ரூ.5க்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என்று கூறப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக ஒவ்வொரு தனி நபரும் மாதம் தோறும் சுமார் ரூ. 500 கூடுதலாக செலவு செய்ய வேண்டியிருக்கும். இத்தகைய சூழலில் சுங்கக்கட்டணமும் உயர்த்தப்பட்டால் அதை ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்பது தான் உண்மை. தனிநபர்களின் நிலை இதுவென்றால், எரிபொருள் விலை உயர்வு காரணமாக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு கோடிக்கணக்கில் கூடுதல் செலவு ஏற்படும். அத்துடன் சுங்கக்கட்டண உயர்வும் சேர்ந்து கொண்டால், அதை சமாளிக்க முடியாது. இதையே காரணம் காட்டி பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டால், அடித்தட்டு மக்களால் வாழ முடியாத நிலை ஏற்பட்டு விடும்.

மக்கள் அனுபவித்து வரும் இந்த சிரமங்களை புரிந்து கொள்ளாமல் கட்டண உயர்வு குறித்து எந்திரத் தனமாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முடிவெடுப்பது தவறாகும். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகள் இதுவரை ஈட்டிய லாபம் குறித்து தணிக்கை மேற்கொண்டு, முதலீட்டை திரும்ப எடுத்த சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வரும் நிலையில், அதை செய்யாமல் சுங்கக்கட்டணத்தை மட்டும் தொடர்ச்சியாக உயர்த்தி வருவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. இது பெரும் அநீதியாகும். எனவே, நாளை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரவுள்ள சுங்கக்கட்டண உயர்வை கைவிட வேண்டும். 60 கி.மீக்கு ஒன்று என்ற வகையில் சுங்கச்சாவடிகள் சீரமைக்கப்படுவதைப் போன்று, ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் எவ்வளவு வருவாய் ஈட்டப்பட்டிருக்கிறது என்பதை தணிக்கை செய்து சுங்கக் கட்டணங்களையும் சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!
செந்தில் பாலாஜிக்கு பெரும் நிம்மதி..! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..! முழு விவரம்!