
தமிழ்நாட்டை நீங்கள் ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான எம்.பி.யு.மான ராகுல் காந்தி ஆவேசமாகப் பேசினார்.
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் மக்களவையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி பேசினார். அவருடைய பேச்சில் தமிழகத்தையும் நீட் தேர்வையும் குறிப்பிட்டு பேசினார். “இந்த நாடான இந்தியா ஒரே இந்தியாவாக இல்லை. இந்த நாடு இரண்டாக பிரிந்து உள்ளது. ஓர் இந்தியா பணம் படைத்தவர்களுக்காக இருக்கிறது. மற்றொரு இந்தியா பணம் இல்லாத ஏழைகளுக்கானதாக இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை மக்களாட்சிதான் நடைபெறுகிறது. ஆனால், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மன்னர் ஆட்சியை நடத்திக் கொண்டு வருகிறார்கள். அதேபோல இந்தியாவில் இரண்டு விதமான பார்வைகள் இருக்கின்றன.
அதில் ஒன்றுதான் இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்ற பார்வை உடையாது. அதன் அர்த்தம் கூட்டாட்சி என்பதாகும். இங்கு ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். தமிழ் நாட்டில் உள்ள என் சகோத, சகோதரிகளிடம் நான் சென்று உங்களுக்கு என்ன வேண்டும் எனக் கேட்பேன். அவர்கள் அவர்களுடைய தேவையை என்னிடம் சொல்வார்கள். அதேபோல எனக்கு என்ன தேவையோ அதை அவர்களிடம் கேட்டுப் பெறுவேன். இதுதான் கூட்டாட்சி. இது ராஜ்ஜியம் கிடையாது. ஒரு போதும் உங்களுடைய வாழ் நாளில் தமிழ்நாட்டை நீங்கள் ஆட்சி செய்யவே முடியாது. தமிழ்நாடு நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என மீண்டும் மீண்டும் கோரிக்கை வைக்கிறது. அதை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
நாட்டு மக்களுடைய கருத்துகளுக்கு அரசர் காது கொடுத்து கேட்க வேண்டும். ஆனால், கேட்காதது போல மத்திய அரசு நடந்து கொள்கிறது. அனைத்து மாநில மக்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்கள், தமிழ் மொழி, தமிழ் கலாசாரம் ஆகியவை தனித்துவம் வாய்ந்தவை, அவற்றுக்கெல்லாம் மத்திய அரசு மதிப்பு அளித்து சம உரிமை வழங்க வேண்டும்.” என்று ராகுல் காந்தி பேசினார்.