
காங்கிரஸ் கட்சியின் தலைவராக இன்று ராகுல் காந்தி பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக, கட்சியின் துணைத் தலைவராக இருந்த ராகுல், இன்று முறைப்படி தலைவராகப் பதவியேற்றார்.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ஒரு தேர்தலை அறிவித்தார்கள். ஆனால், அதில் ராகுலைத் தவிர வேறூ எவரும் வேட்பு மனுவைத் தாக்கல் செய்யவில்லை. எனவே போட்டியின்றி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார் ராகுல். அவர் இன்று தலைவராக முறைப்படி பதவி ஏற்றுக் கொண்டார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றதற்கு ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறிய சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சி புதிய திசையை நோக்கி பயணிப்பதாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய சோனியா, இன்று, நம் முன் பல்வேறு சவால்கள் காத்துக் கிடக்கின்றன. அந்த சவால்களை சாதனையாக்குவார் ராகுல் என்றே நான் நம்புகிறேன்.
கடந்த 20 வருடங்களுக்கு முன்பு நான் தலைவராகப் பொறுப்பேற்ற போது பெரும் அச்சத்தில் இருந்தேன். காங்கிரஸ் கட்சியை வழி நடத்துவேனா என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அந்த சவாலை எல்லாம் முறியடித்து இத்தனை ஆண்டு காலம் நான் அரசியல் வாழ்வில் பயணித்துள்ளேன் என்று பேசினார் சோனியா காந்தி.
1984ல் இந்திராகாந்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் என் வாழ்க்கையையே மாற்றியது என்று கூறிய சோனியா, இந்திரா காந்தி என்னை சொந்த மகளாகக் கருதினார். அவரிடம் இருந்து இந்தியாவைப் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன் என்று குறிப்பிட்ட சோனியா, ராஜிவ்காந்தி கொலை செய்யப்பட்டதால் அரசியலே வேண்டாம் என ராகுல்காந்தி கருதியதாகத் தெரிவித்தார். எனவே அந்த அச்சத்தை எல்லாம் துடைத்தெறிந்து, இப்போது, அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்றுள்ளதாகக் கூறி அவருக்கு வாழ்த்து கூறினார் சோனியா.
சோனியா பேசியபோது, பட்டாசுச் சத்தம் விண்ணைப் பிளந்தது. அதனால், தனது பேச்சின் இடையே அடிக்கடி நிறுத்தினார் சோனியா.
கடந்த 19 ஆண்டுகளாக காங்கிரஸ் தலைவராக இருந்து வழிநடத்தியதற்காக, சோனியாவுக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. மன்மோகன் சிங் நினைவுப் பரிசு வழங்க, மோதிலால் வோரா பொன்னாடை அணிவித்து கௌரவப் படுத்தினார்.
முன்னதாக, தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்துக்கு சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் ஒன்றாகவே வந்தனர். பிரியங்கா காந்தியும் ராபர்ட் வதேராவும் வந்தனர். தொடர்ந்து முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வந்தனர்.
பின்னர், காங்கிரஸ் தலைவராக தாம் செய்யப் பட்டதற்கான சான்றிதழை கட்சியின் தேர்தல் அதிகாரி முல்லப்பள்ளி ராமச்சந்திரனிடம் ஒப்படைத்தார் ராகுல். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர் தனது மகன் ராகுலிடம் காங்கிரஸ் தலைவர் பொறுப்புகளை ஒப்படைத்தார் அவரது அன்னை சோனியா காந்தி. தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட அவருக்கு வாழ்த்து கூறிக் ஆசீர்வதித்தார்.
ராகுலுக்கு இப்போது 47 வயதாகிறது. கடந்த 2013 முதல் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக பதவி வகித்து வந்தார். இந் நிலையில் 19 ஆண்டுகளாக தனது தாய் சோனியா வகித்து வந்த காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை இப்போது தாம் ஏற்றுக் கொண்டுள்ளார்.
மோதிலால் நேரு காலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான நேரு வம்சம் தொடர்கிறது. மோதிலாலுக்குப் பின்னர் அவர் மகன் ஜவாஹர்லால் நேரு, பின் அவரது மகள் இந்திரா காந்தி, அவரது மகன் ராஜீவ் காந்தி, அவரது மனைவி சோனியா காந்தி, பின் அவரது மகன் ராகுல் காந்தி என நேரு குடும்பத்தின் 6 வது நபராக ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுள்ளார்.
நேரு குடும்ப வாரிசுகளாயினும், இந்திராவின் கணவர் காண்டே மூலம் காந்தி என்ற குடும்பப் பெயர் ஒட்டிக் கொண்டு, அதன் பின் காந்தி ஒட்டிக் கொண்டு விட்டதாக சர்ச்சைகளும் பரவலாக உண்டு. எப்படியோ, வழிவழியாய் வரும் மன்னராட்சியைப் போல், ஒரு கட்சியிலும் வழிவழியாய் தலைமைப் பதவி ஜனநாயகத்தின் பேரால் ஒட்டிக் கொண்டுவிட்டது.