வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி இன்று வேட்பு மனு தாக்கல் ! கோழிக்கோடு விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு !!

By Selvanayagam PFirst Published Apr 4, 2019, 8:35 AM IST
Highlights

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக  கோழிக்கோடு விமான நிலையம் வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
 

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது பாரம்பரிய தொகுதியான அமேதியுடன், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் வருகிற 23-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளது.

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வயநாடு தொகுதியில் களமிறங்கும் ராகுல் காந்தி, இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். இதற்காக  டெல்லியில் இருந்து இன்று காலை கோழிக்கோடு  விமான நிலையம் வந்தடைந்தார்.அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து கோழிக்கோட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பெட்டா நகருக்கு செல்கிறார். பின்னர் அங்கிருந்து கலெக்டர் அலுவலகம் சென்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.

முன்னதாக தனது சகோதரியும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்காவுடன் வாகன பேரணி ஒன்றையும் ராகுல் காந்தி நடத்துவார் என தெரிகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, உடல் நலக்குறைவு காரணமாக இந்த நிகழ்வுகளில் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ராகுல் காந்தியின் வாகன பேரணி மற்றும் வேட்புமனு தாக்கல் நிகழ்வுகளில் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி, பொதுச்செயலாளர்கள் உம்மன்சாண்டி, கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக், கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, மாநில கட்சித்தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இதற்கிடையே ராகுல், பிரியங்கா ஆகியோர் வருகையை முன்னிட்டு வயநாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. அங்கு மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் அடிக்கடி கண்டறியப்பட்டதாலும், சமீபத்தில் மாவோயிஸ்டு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாலும் போலீசார் கூடுதல் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு உள்ளனர்.

ராகுல் காந்தி மிக உயரிய பாதுகாப்பின் கீழ் இருப்பதால், வயநாட்டில் அவர் செல்லும் பகுதிகளில் எல்லாம் சிறப்பு பாதுகாப்பு கமாண்டோக்கள், பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களின் உறுதியை பொறுத்தே ராகுல்காந்தியின் வாகன பேரணி நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.

click me!