
எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ராஜா தனது அடியாட்கள் 100 பேருடன் தீபா வீட்டுக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டார். மேலும் பத்திரிக்கையாளர்களுக்கும் மிரட்டல் விடுத்தார். இதனால் தீபா பேரவையில் உச்சகட்ட குழப்பம் நிலவி வருகிறது.
கடந்த 24ஆம் தேதி ஜெ.தீபா, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை தொடங்கினார். தான் பொருளாளர் பதவியை வகிக்க போவதாகவும் அறிவித்தார். தொடர்ந்து சில நிர்வாகிகளையும் அவர் நியமித்தார். அதில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் செயலாளராக ராஜா என்பவரை நியமித்தார்.
இந்நிலையில் பேரவையின் செயலாளர் ராஜா, பலருக்கு பதவி வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் சென்னை தியாகராய நகரில் உள்ள தீபா வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ராஜாவுக்கு எதிராக முழக்கமிட்ட அவர்கள் ராஜாவை பேரவை செயலாளராக ஏற்க முடியாது என்று கோஷமிட்டனர்.
பின்னர், இதுகுறித்து தீபா இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது நானே பேரவையின் செயலாளராக செயல்படுவேன் என்றும், விரைவில் புதிய செயலாளர் நியமிக்கப்படுவார் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ராஜா தனது அடியாட்கள் 100 பேருடன் தீபா வீட்டுக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டார். மேலும் பத்திரிக்கையாளர்களுக்கும் மிரட்டல் விடுத்தார்.
புதிய அமைப்பை உருவாக்கிய இரண்டே நாளில் தீபா பேரவையில் உச்சகட்ட குழப்பம் நிலவி வருகிறது. ஒரு அமைப்பின் முக்கிய அங்கமான நிர்வாகிகளை தேர்ந்தேடுப்பதற்கே தீபா திக்கு முக்காடுகிறார்.
இன்னும் கட்சியை வழிநடத்துவதில் உள்ள சிக்கல்களை எவ்வாறு தீர்க்கபோகிறார் என்று மக்களிடையேயும் மூத்த அரசியல் நிர்வாகிகளிடையேயும் விமர்சனங்கள் எழுகின்றன.
இது ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு மேலும் தலைவலியை உண்டாக்கியுள்ளது.