நிவரைத் தொடர்ந்து புரவி..!! தமிழக மக்களே உஷார், மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 1, 2020, 1:03 PM IST
Highlights

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக  மாறியுள்ளதை அடுத்து சென்னை தொடங்கி கன்னியாகுமரியின் குளச்சல் துறைமுகம் வரை 11 இடங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக  மாறியுள்ளதை அடுத்து சென்னை தொடங்கி கன்னியாகுமரியின் குளச்சல் துறைமுகம் வரை 11 இடங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக் கடலின் தென் கிழக்கு பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது கன்னியாகுமரிக்கு கிழக்கே1,750 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 985 கிலோ மீட்டர் தூரத்திலும் நிலை கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.  

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறி கன்னியாகுமரி கடல் பகுதியில் நிலைகொள்ளும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அந்த புயலுக்கு புரவி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளது எனவும், புயல் சின்னம் திரிகோணமலையில் இருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. 

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் புயலாக மேலும் வலுவடையும் என்றும், நாளை மாலை அல்லது இரவில் இலங்கையில் புரவி புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து சென்னையில் தொடங்கி கன்னியாகுமரியின் குளச்சல் துறைமுகம் வரை 11 இடங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை முதல் மிகவும் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

 

click me!