
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை பற்றி பேச ஸ்டாலினுக்கு அருகதை கிடையாது என புதுச்சேரி சட்டப்பேரவை அதிமுக கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு குற்றவாளி என்றும், அவரின் பெயர்களில் அரசு விழா எதுவும் நடத்தகூடாது என்றும், ஜெயலலிதாவின் புகைப்படங்களை அகற்ற வேண்டும் எனவும் எதிகட்சி தலைவர் ஸ்டாலின் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தார்.
இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை அதிமுக கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தில் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு குறுக்கு வழியில் ஆட்சியை கைப்பற்ற பகட்டுவேஷம் போட்ட மு.க.ஸ்டாலின் முயற்சி தோல்வி அடைந்ததால் தற்போது வீணாக பேசி வருகிறார்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அவரை புகழ்ந்து பேசி அதில் அரசியல் ஆதாயம் தேட நினைத்த ஸ்டாலினின் முயற்சி பலிக்கவில்லை.
பின்னர், பேரவையில் கலவரத்தில் ஈடுபட்டு ஆளும் கட்சியின் ஒருசிலரின் துணையோடு ஆட்சியை கவிழ்க்க நினைத்த சதியும் அதிமுகவின் எம்.எல்.ஏக்களால் முறியடிக்கப்பட்டது.
ராமசீதா என்ற போலி மருத்துவரை பயன்படுத்தி ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சையில் மரணம் அடைந்துவிட்டதாக ஸ்டாலின் தூண்டுதலின் பேரில் வலைதளங்கள் வாயிலாக பொய்யான கருத்தினை பரப்ப செய்தார்.
ஜெயலலிதா இறந்த போது அவரை புகழ்ந்த ஸ்டாலின் தற்போது ஜெயலலிதாவின் படத்தை வைக்க கூடாது எனக்கூறுவது கண்டிக்கத்தக்கது.
ஜெயலலிதாவை பற்றி பேச ஸ்டாலினுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எந்த அருகதையும் கிடையாது. ஜெயலலிதாவை கொலையாளி என கூறிய தனது கருத்தை ஸ்டாலின் உடனடியாக திரும்ப பெற வேண்டும் மேலும் இதுகுறித்து உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
பேரவை தலைவரின் மாண்புக்கு மரியாதை அளிக்காமல் திமுக எம்.எல்.ஏக்கள் பேரவைத் தலைவரின் இருக்கையில் அமர்ந்ததை நாராயணசாமி ஆதரித்து பேசுவது கண்டிக்கத்தக்கது.
பல்வேறு சம்பவங்ளில் முதல்வர் நாராயணசாமி இரட்டை வேடம் போடுகிறார். நாராயணசாமியும், ஆளுநரும் வீண் விளம்பரம் தேடிக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபடுவதை கைவிட்டு மாநில வளர்ச்சி திட்டங்களை கொண்டு வர கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அன்பழகன் தெரிவித்தார்.