
டிடிவி தினகரனை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன் எனவும் நான் இன்னும் அதிமுகவில் தான் இருக்கிறேன் எனவும் புதுச்சேரி எம்.பி. கோகுல கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு அமோக வாக்குகள் பெற்று வென்றுள்ளார் தினகரன். ஆளும்கட்சி அதிமுக படுதோல்வியடைந்தது, பலம் வாய்ந்த எதிர்க்கட்சியான திமுக டெபாசிட் இழந்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
தினகரனின் வெற்றியைத் தொடர்ந்து அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜெயலலிதா உயிருடன் இருந்த போது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அதிமுக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா தினகரனை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா குடும்பத்தை மிகக் கடுமையாக எதிர்த்து வந்தவர் சசிகலா புஷ்பா என்பது குறிப்பிடத்தக்கது.
இதைதொடர்ந்து இன்று மீண்டும் ஒரு எம்.பி. தினகரனை சந்தித்து பேசினார். சென்னையில் உள்ள தினகரன் இல்லத்தில் புதுச்சேரி எம்பி கோகுலகிருஷ்ணன் அவரை நேரில் சந்தித்து பேசினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கோகுல கிருஷ்ணன் டிடிவி தினகரனை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன் எனவும் நான் இன்னும் அதிமுகவில் தான் இருக்கிறேன் எனவும் தெரிவித்தார்.