
புதுச்சேரி லட்சுமி ஜுவல்லரியின் 3 நகைக்கடைகளில் சோதனை நடத்தியதில் சசிகலா குடும்ப நண்பரான நவீன் பாலாஜி மூலம் பெரும் தொகை கைமாறியது தெரியவந்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள சசிகலா உறவினர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
இந்த சோதனையை 200 கார்களில் வந்த 1800 வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே பேசிய டிடிவி தினகரன் வருமான வரித்துறை அதிகாரிகளே ஏதாவது வைத்துவிட்டு எடுத்தால் தான் உண்டு எனவும் வேறு எதுவும் அவர்கள் கண்டெடுக்க ஒன்றும் இருக்காது எனவும் தெரிவித்தார்.
நேற்று காலை 7 மணிக்கு சுமார் 187 இடங்களில் துவங்கிய வருமான வரிசோதனை 40 இடங்களில் மட்டுமே தற்போது நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள 147 இடங்களிலும் வருமான வரித்துறையினரின் சோதனை தொடர்ந்து வருகிறது.
அந்த வரிசையில் புதுச்சேரி லட்சுமி ஜுவல்லரியின் 3 நகைக்கடைகளில் 2 வது நாளாக சோதனை தொடர்கிறது.
லட்சுமி ஜூவல்லர்ஸ் உரிமையாளர் நவீன் பாலாஜியிடம் வருமானவரி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரி லட்சுமி ஜுவல்லரியில் வருமான வரி சோதனையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
சசிகலா குடும்ப நண்பரான நவீன் பாலாஜி மூலம் பெரும் தொகை கைமாறியதாகவும் புதுச்சேரி அருகே ocean spray நட்சத்திர ஓட்டலை லட்சுமி ஜுவல்லரி நடத்தி வருவதாகவும் வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ocean spray ஓட்டலை டி.டி.வி.தினகரன் தரப்பினர் பெரும் தொகைக்கு வாங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.