
பிரதமர் மோடியை விமர்சித்து பஜ்ஜி, பக்கோடா விற்பனை முதலமைச்சர் நாராயணசாமிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புதுவை பாஜகவினர் அல்வா கடை திறந்து பொதுமக்களுக்கு விற்பனை செய்தனர்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரதமர் நரேந்திர மோடி, அண்மையில் பேட்டி அளித்திருந்தார். அப்போது, நம் இளைஞர்கள் இளைஞர்கள், பக்கோடா விற்று தினமும் சம்பாதிக்கிறார்கள். அதுவும் ஒல்ல ஒரு வேலை வாய்ப்புத்தானே என்று கருத்து தெரிவித்திருந்தார்.
பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு இடங்களில் மாணவர்கள், இளைஞர்கள் என பலர், சாலையில் பக்கோடா செய்து விற்று, மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களில் சிலர் கைதும் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், புதுச்சேரியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் பஜ்ஜி, பக்கோடா செய்து விற்கும் போராட்டம் அண்மையில் நடந்தது. புதுச்சேரியின் முக்கிய வீதியான நேரு வீதியில் நடந்த இந்த போராட்டத்தில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பஜ்ஜி, பக்கோடா செய்து விற்கும் போராட்டத்துக்கு எதிர்வினையாக, புதுவை பாஜகவினர், நாராயணசாமி அல்வா கடை என்ற பெயரில் அல்வா கடை திறந்து விற்பனை செய்தனர்.
அப்போது, முதலமைச்சர் நாராயணசாமி ஆட்சிக்கு எதிராகவும், அவர்கள் கோஷமிட்டனர். புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்து விட்ட நிலையிலும், மக்கள் நலத்திட்டங்கள் எதையும் நிறைவேற்றவில்லை.